அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி 10-ந் தேதி நடக்கிறது

அண்ணா பிறந்த நாளையொட்டி பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள் போட்டி வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது என கலெக்டா் பாலசுப்பிரமணியம் தொிவித்துள்ளாா்.;

Update:2022-09-04 20:50 IST

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி ஒவ்வொரு ஆண்டும், பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு சைக்கிள் போட்டி நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சைக்கிள் போட்டி வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கி நடைபெறும்.

இதில் 13 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீ. தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ., 15 மற்றும் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ, மாணவிகளுக்கு 15 கி.மீ. தூர போட்டியும் நடத்தப்படும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் வயது வரம்பு 1.7.2022 அன்று வரை கணக்கிடப்படவேண்டும். வயதுச் சான்றினை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இருந்து பெற்று வரவேண்டும். இதற்கான நுழைவுப் படிவத்தினை மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் கொண்டுவருதல் வேண்டும்.

விபத்துகளுக்கு மாணவர்களே பொறுப்பு

போட்டிகளில் முதல் 10 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும். இதில் கலந்துகொள்வோர் சாதாரண சைக்கிளை (அதாவது இரண்டு பிரேக்குகள், சாதாரண ஹேன்ட்பார்) தாங்களே கொண்டு வருதல் வேண்டும். மேலும் போட்டிகளில் கலந்துகொள்வோர் போட்டி தொடங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பாக வந்து, போட்டி நடக்கும் இடத்தில் உரிய சான்றுகளை வழங்கி, பதிவு எண் பெற்று, தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும்.

போட்டியின்போது ஏற்படும் விபத்து அல்லது அசம்பாவிதங்களுக்கு பங்குகொள்ளும் நபரே பொறுப்பேற்க வேண்டும். இதற்கான எழுத்து மூலமான ஒப்புதலை மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைத்த பின்னரே போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். எனவே விருப்பமுள்ள மாணவ-மாணவிகள் தங்கள் பெயர்களை வருகிற 9-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேற்கண்ட தகவல் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்