மோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதி முதியவர் படுகாயம்:டிரைவர் கைது
கம்பம் அருகே மோட்டார்சைக்கிள் மீது டிராக்டர் மோதிய முதியவர் படுகாயம் அடைந்த விபத்தில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராமு (வயது 80). நேற்று முன்தினம் இவர், காமயகவுண்டன்பட்டியில் இருந்து மோட்டார் சைக்கிளில் கூடலூருக்கு வந்தார். பின்னர் அங்குள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் வாங்கிக்கொண்டு கூடலூர்- குமுளி தேசிய நெடுந்சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
அப்போது கூடலூர் கன்னிகாளிபுரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் (32) என்பவர். ஓட்டிவந்த டிராக்டர், எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குப்பதிந்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.