ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் - போக்குவரத்து துறை
இன்று இரவு முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.;
சென்னை,
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு சமீபத்தில் திறப்பு விழா நடத்தப்பட்டது. சென்னை மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு கிளாம்பாக்கத்தில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் மற்ற ஊர்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்பட வேண்டும் என போக்குவரத்து துறை சில தினங்களுக்கு முன்னர் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியது. அதற்கு கிளாம்பாக்கத்தில் போதிய இட வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டிலிருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் போக்குவரத்து துறை சார்பில் இன்று வெளியான அறிவிப்பில் கிழக்கு கடற்கரை சாலை மார்க்கம் நீங்கலாக மற்ற அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறினால் மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படி மட்டுமல்லாமல் கிரிமினல் சட்ட நடவடிக்கை பாயும் என போக்குவரத்து துறை எச்சரித்துள்ளது. மேலும் ஆம்னி பஸ் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.