ஆம்னி பஸ் கவிழ்ந்து புது மாப்பிள்ளை உள்பட 3 பேர் பலி
கயத்தாறு அருகே நாற்கர சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலியானார்கள்.
கயத்தாறு:
கயத்தாறு அருகே நாற்கர சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலியானார்கள்.
ஆம்னி பஸ்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரியில் இருந்து நேற்று முன்தினம் இரவில் சென்னைக்கு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது.
இந்த பஸ்சை விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சோமநாதபுரத்தை சேர்ந்த முருகன் மகன் பாண்டி முனியான்டி (வயது 32) என்பவர் ஓட்டினார். இதில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
டயர் வெடித்து கவிழ்ந்தது
நள்ளிரவில் பஸ் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே அரசங்குளம் பகுதியில் நாற்கர சாலையில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது, திடீரென்று பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையின் நடுவே இருந்த இரும்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு, மறுபுறம் உள்ள சாலையின் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
போலீசார் விரைந்தனர்
இதில் பஸ்சில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டனர். அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
இதுகுறித்து உடனடியாக கயத்தாறு போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் ஆன்டனி திலீப் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பஸ்சின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
3 பேர் பலி
இதில் நாகர்கோவில் கீழமண்ணைவிளையைச் சேர்ந்த குமரேசன் மகன் சிவராமன் (33), திருவட்டாறு புத்தக்கடை ஆர்.கே. தெருவைச் சேர்ந்த ஜீசஸ்ராஜன் (50), பஸ் டிரைவர் பாண்டி முனியாண்டி ஆகிய 3 பேர் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தது தெரியவந்தது.
மேலும் பஸ்சில் இருந்த தக்கலை மாதவன் கோவில் தெருவைச் சேர்ந்த மதன்குமார் (32), மாணிக்கநகரைச் சேர்ந்த சூரியபிரகாஷ் (25), செங்கல்பட்டு மாவட்டம் தாலூர் கிராமம் பச்ைச கோவில் தெருவைச் சேர்ந்த யுகந்தி (30), சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த விநாயகா (30), திருவட்டாறு புத்தக்கடையைச் சேர்ந்த விக்டர் (51), சென்ைன புதுப்பேட்டை பாரதிநகரைச் சேர்ந்த குமார் (36) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
போக்குவரத்து மாற்றம்
படுகாயம் அடைந்தவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான 3 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் வாகனங்கள் அணிவகுப்பு நின்றது. போலீசார் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பி அனுப்பினர். பின்னர் ராட்சத கிரேன் ெகாண்டு வரப்பட்டு, ஆம்னி பஸ் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையடுத்து அங்கு போக்குவரத்து சீரானது.
புதுமாப்பிள்ளை
விபத்தில் பலியான சிவராமன் ெசன்னையில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும் விஜயலட்சுமி என்பவருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த சிவராமன் தனது மனைவியுடன் உவரி சுயம்புலிங்க சுவாமி ேகாவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர்கள் நேற்று முன்தினம் ஆம்னி பஸ்சில் சென்னைக்கு திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் சிவராமன் உரியிழந்துள்ளார். அவரது மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பியது தெரியவந்துள்ளது.
சோகம்
மேலும் பஸ் டிரைவரான பாண்டி முனியாண்டி பல ஆண்டுகளாக பல்வேறு நிறுவனத்தில் ஆம்னி பஸ் ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் தான் விபத்துக்குள்ளான தனியார் ஆம்னி பஸ் நிறுவனத்திற்கு வேலைக்கு வந்துள்ளார். இவருக்கும் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விபத்தில் பலியான ஜீசஸ்ராஜன் பெயிண்டராக உள்ளார்.
இந்த விபத்து குறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கயத்தாறு அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் புதுமாப்பிள்ளை உள்பட 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-------------