பஸ்சில் மூதாட்டி திடீர் சாவு
நெல்லையில் பஸ்சில் மூதாட்டி திடீரென்று இறந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள பசுவந்தனை சொட்டம்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் பூச்சாண்டி. இவருடைய மனைவி ஆவுடையம்மாள் (வயது 65). இவருக்கு கண் பார்வையில் பிரச்சினை இருந்து வந்ததால் நேற்று முன்தினம் நெல்லையில் உள்ள கண் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்றார். பின்னர் நேற்று காலையில் அவர் ஊருக்கு செல்ல நெல்லை புதிய பஸ் நிலையத்துக்கு வந்தார். அவருடன் அதே பகுதியை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்களும் வந்திருந்தனர்.
அவர்கள் கோவில்பட்டி செல்லும் தனியார் பஸ்சில் ஏறி அமர்ந்தனர். பஸ் புறப்படுவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஆவுடையம்மாள் தான் இருந்த இருக்கையிலேயே பேச்சு மூச்சின்றி கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் உடனடியாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து பார்த்தபோது ஆவுடையம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.