முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டில் பரபரப்பு தீர்ப்பளிக்கப்பட்டது.
பாலியல் தொல்லை
தேனி அருகே பத்ரகாளிபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 74). இவர், 8 வயது, 6 வயதுடைய 2 சிறுமிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் பாலியல் தொல்லை கொடுத்தார். அக்கா, தங்கையான அந்த சிறுமிகளுக்கு அய்யப்பன் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக சிறுமிகள் தங்களின் பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமிகளின் தாயார் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், அந்த சிறுமிகளுக்கு அய்யப்பன் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அய்யப்பனை கைது செய்தனர்.
20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு, தேனி மாவட்ட மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் குருவராஜ் ஆஜராகி வாதாடினார். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து நீதிபதி கோபிநாதன் நேற்று தீர்ப்பு கூறினார்.
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அய்யப்பனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் அய்யப்பன் கண் கலங்கினார்.
பின்னர் அவரை போலீசார் அங்கிருந்து அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.