தியாகதுருகம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக வழியை மூட முயன்ற அதிகாரிகள்பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

தியாகதுருகம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக வழியை மூட முயன்ற அதிகாரிகள் பொதுமக்கள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-29 18:45 GMT

தியாகதுருகம், 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அனுமதிக்கப்படாத இடங்களில் சாலையை கடந்து செல்ல பயன்படுத்தும் வழிகளை மூட வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் சின்னசேலம் அடுத்த பங்காரம் முதல் உளுந்தூர்பேட்டை வரை 11 இடங்களில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல பொதுமக்கள் தற்காலிகமாக வழி அமைத்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சேலம் தேசிய நெடுஞ்சாலை திட்ட மேலாளர் சதீஷ், உத்தரவின்பேரில் தேசிய நெடுஞ்சாலை ரோந்து பிரிவு அதிகாரிகள் துரை, சக்திவேல் ஆகியோர் அடங்கிய குழுவினர் தியாகதுருகம் பெரியாம்பட்டு பகுதியில் உள்ள அனுமதிக்கப்படாத வழியை அடைக்க பள்ளம் தோண்டினர். இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பணியை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து அவர்கள் இந்த வழியை மூடினால் இப்பகுதி மக்கள் தியாகதுருகம் செல்வதற்கு சாலையில் வாகனம் வரும் திசைக்கு எதிர் திசையில் செல்ல வேண்டி உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் பெரியமாம்பட்டு பகுதியில் இறந்தவர்களின் உடலை இடுகாட்டிற்கு எடுத்துச் செல்ல சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. எனவே இந்த வழியை மூடக்கூடாது எனவும், பொதுமக்கள் சாலையை கடந்து செல்லும் வகையில் இங்கு நிரந்தரமாக வழி அமைக்க வேண்டும் எனவும் கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் தற்காலிகமாக பணியை நிறுத்தி வைப்பதாகவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் பேசி தீர்வு காணும் படியும் அறிவுறுத்தினர். அதனை ஏற்று பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்