தஞ்சை அருகே கடைகளில் அதிகாரிகள் சோதனை
தஞ்சை அருகே கடைகளில் அதிகாரிகள் சோதனை;
தஞ்சையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 15 கடைகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
தஞ்சை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இது குறித்து சோதனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன் பேரில் தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் நமச்சிவாயம் வழிகாட்டுதலின் பேரில் தஞ்சை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சிங்காரவேல், சுகாதார ஆய்வாளர்கள் அருமைதுரை, செல்வராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர்.
15 பேருக்கு அபராதம்
தஞ்சையை அடுத்த விளார் மற்றும் புதுப்பட்டினம் பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டன. அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைகளின் உரிமையாளர்கள் 15 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளில் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, கடைகளின் உரிமையாளர்களுக்கும் தலா ரூ.200 வீதம் ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.