பிறதுறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்

திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்க பிற துஷை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் கூறினார்.;

Update:2023-03-29 23:27 IST

குறைதீர்வு கூட்டம்

திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. இதில் கருத்து கேட்பு குழு பிரிவிலிருந்து பெறப்பட்ட திருப்தி அடையாத 18 மனுதாரர்களை நேரில் அழைத்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ளவம், 10 பேரிடம் புதிதாக கோரிக்கை மனுக்களை பெற்ற சம்மந்தப்பட்ட போலீசாரிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒருங்கிணைந்து...

தமிழ்நாட்டிலேயே விபத்துகள் குறைவாக உள்ள மாவட்டம் திருப்பத்தூர் மாவட்டமாகும். விபத்துகள் அதிகமாக நடைபெறும் இடங்களாக 37 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அங்கு விபத்துகளை தவிர்க்க காவல் துறை சார்பில் விழிப்புணர்வு பதாகைகள், ஒளிரும் ஸ்டிக்கர், சாலையின் மத்தியில் தடுப்புகள், காவல் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் விபத்து குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 46 பேர் இறந்துள்ளனர். ஆனால் தற்போது நடப்பாண்டில் 2 மாதத்தில் 21 பேர் மட்டுமே இறந்துள்ளனர்.

இதேநிலை தொடர காவல் துறையுடன் அரசின் பிற துறைகளை சேர்ந்த அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். திருப்பத்தூர் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க தேவைப்படும் இடங்களில் ஒருவழிப்பாதை அமல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. விரைவில், வருவாய், காவல், நெடுஞ்சாலை, உள்ளாட்சித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி ஒருவழிப்பாதை குறித்து அறிவிக்கப்படும்.

ஆட்டோ பறிமுதல் செய்யப்படும்

பள்ளி குழந்தைகள் மட்டுமின்றி பயணிகளையும் அதிகமாக ஆட்டோவில் ஏற்றக்கூடாது. மீறினால், ஆட்டோவை பறிமுதல் செய்வதுடன், ஓட்டுநர் உரிமம், பர்மிட் ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பள்ளி, கல்லூரி, கோவில், குடியிருப்புக்கு அருகாமையில் உள்ள கடைகளில் போதை பொருள் விற்பனை இருந்தால் பொதுமக்கள் மாவட்ட காவல் துறை கட்டுப்பாட்டு அறை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட காவல் துறை வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில், சரவணன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்