வடக்குபொய்கை நல்லூரில் கடல்நீர் புகுந்த விளைநிலங்களை அதிகாரிகள் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக வடக்கு பொய்கை நல்லூரில் கடல்நீர் புகுந்த விளைநிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக வடக்கு பொய்கை நல்லூரில் கடல்நீர் புகுந்த விளைநிலங்களை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடல் நீர் புகுந்தது
'மாண்டஸ்' புயல் காரணமாக நாகை, வேளாங்கண்ணியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் கடலோர கிராமங்களான நாகூர் பட்டினச்சேரி அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், வடக்கு பொய்கை நல்லூர் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் கடல் நீர் உட்புகுந்தது.
வடக்குபொய்கைநல்லூர், மண்டுவாகரை கடற்கரையோரம் பகுதியில் உள்ள சுமார் 200 ஏக்கரில் கடல் நீர் புகுந்தது.மேலும் இந்த பகுதியில் பாலம் கட்டுமான பணிக்காக அடைக்கப்பட்ட தடுப்புகள், மணல் திட்டுகள் இதுவரை அகற்றப்படாமல் உள்ளதால் வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடியாததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். தொடர்ந்து சாகுபடி செய்வதற்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது குறித்து செய்தி நேற்று 'தினத்தந்தி' நாளிதழில் படத்துடன் வெளியானது.
இதன் எதிரொலியாக மாவட்ட வேளாண்மை துறை இணை இயக்குனர் அகண்ட ராவ் தலைமையில் வருவாய்த் துறையினர், வடக்குபொய்கை நல்லூருக்கு நேற்று சென்று கடல் நீர்புகுந்த விளைநிலங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தடுப்பணை கட்ட கோரிக்கை
அப்போது வடக்கு பொய்கைநல்லூரில் தடுப்பணை கட்ட வேண்டும். கல்லாரில் இருந்து வடக்குபொய்கை நல்லூர் வரை கருங்கல் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைத்தால் தான் விளைநிலங்களில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க முடியும் என்று அதிகாரிகளிடம் விவசாயிகள் தெரிவித்தனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து உடன் ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அந்த பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.