சேலம் அரசு ஆஸ்பத்திரியில் ஆவின் பாலகத்தில் தரமற்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறையின் மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் அலுவலர்கள் சுருளி ராஜா, சிவலிங்கம் ஆகியோர் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் திடீரென சோதனை நடத்தினர். அங்கிருந்து தயாரிப்பு தேதி குறிப்பிடாத 60 பாக்கெட்டுகள் பன், முந்தைய தேதியிட்ட 16 பாக்கெட்டுகள் பிரட், பொட்டல விபரங்கள் குறிப்பிடாத பாதாம் கியர் 200 மில்லி கொண்ட 36 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.16 ஆயிரம். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த கடையின் உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்க நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் பாதாம் கியர் உணவு மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவு வந்த பிறகு தான் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.