ஓசூர் மாநகராட்சி பகுதியில் கடைகளில் அதிகாரிகள் சோதனை
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஓசூர் மாநகராட்சி பகுதியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 5 கடைக்காரர்களுக்குஅபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஓசூர்:-
பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என ஓசூர் மாநகராட்சி பகுதியில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 5 கடைக்காரர்களுக்குஅபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதிகாரிகள் சோதனை
ஓசூர் மாநகரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பல்வேறு இடங்களில் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.
அதன் அடிப்படையில் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் உத்தரவின் பேரில் மாநகராட்சியின் நகர்நல அலுவலர் அஜிதா தலைமையில் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள், ஓசூர் நாமால்பேட்டை பகுதியில் உள்ள குடோன்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
5 கடைக்காரர்களுக்கு அபராதம்
இந்த சோதனையின் போது பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 1½ டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர் மற்றும் பைகள், தம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், ஓசூர் ஆனந்தநகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு சென்று அழிக்கப்பட்டன. இதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.39 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் இனிவரும் நாட்களில் இதுபோன்று தடை செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்றும் எச்சரிக்கை செய்யப்பட்டனர்.