அரசு பள்ளி வளாகத்தில் சோலை வனம்

சுல்தான்பேட்டை அருகே அரசு பள்ளி வளாகத்தில் சோலை வனம் உருவாக்கும் மாணவர்களின் செயலுக்கு பாராட்டு குவிகிறது.

Update: 2023-08-09 20:00 GMT

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை அருகே அரசு பள்ளி வளாகத்தில் சோலை வனம் உருவாக்கும் மாணவர்களின் செயலுக்கு பாராட்டு குவிகிறது.

அரசு பள்ளி

சுல்தான்பேட்டை அருகே பூராண்டாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுலட்சுமிநாயக்கன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

இவர்களுக்கு பாடங்களை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் ஆர்வம் காட்ட ஆசிரியர்கள் ஊக்குவித்து வருகின்றனர். குறிப்பாக மாணவர்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று 5 குழுக்களாக பிரித்து உள்ளனர்.

சோலை வனம்

இந்த குழுவினர் வாரந்தோறும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு நாளில், பள்ளியை சுற்றி நடப்பட்டு உள்ள மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்க ஊக்குவித்து வருகின்றனர். இதன் மூலம் பள்ளி வளாகம் சோலை வனமாக மாறி வருகிறது. தற்போது அங்கு 900 மரக்கன்றுகள் உள்ளன. அதில் மா, கொய்யா, புங்கன், வேம்பு, பூவரசு, மூங்கில், பனை, மகிழம், நாவல் ஆகிய மரங்களும் அடங்கும். பள்ளி விடுமுறை நாட்களில் அந்த மரக்கன்றுகளை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் பராமரித்து வருகின்றனர்.

பாராட்டு

இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் இலட்சுமணசாமி கூறும்போது, சுற்றுச்சுழலை பாதுகாப்பதில் மரங்களின் பங்கு அளப்பறியது. அவற்றை வளர்ப்பதில் இளைய தலைமுறையினரிடையே ஆர்வத்தை ஊக்குவிக்க எங்கள் பள்ளியில் இந்த முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். மாணவர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதனால் சிறப்பாக செயல்படுகிறோம் என்றார்.

இந்த பணியில் ஆசிரியை மங்கையர்கரசி, சத்துணவு பணியாளர்கள் கலைவாணி, சவுந்தர்யா ஆகியோர் மாணவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களை பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்