நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் வழங்க வேண்டும் என்பது உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மடியேந்தியபடி நின்று நூதன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் கோமதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் தமிழரசி, மாவட்ட இணை செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தங்கராஜூ, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முருகேசன், மாவட்ட இணை செயலாளர் இளங்கோவன், பொது சுகாதாரத்துறை மாவட்ட செயலாளர் இளவேந்தன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கி பேசினார்.
அதைத்தொடர்ந்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்ப வலியுறுத்தியும், காலமுறை ஊதியம் வழங்க கோரியும் சத்துணவு ஊழியர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும் அரசு சத்துணவு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்குவதோடு, அமைப்பாளர்களுக்கான வயது வரம்பை 60 வயதில் இருந்து 62 வயதாக உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.