விடுதி குளியலறையில் நர்சிங் மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? - குமரியில் பரபரப்பு

நர்சிங் மாணவியின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-01-31 09:25 GMT

குமரி,

நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகில் உள்ள சொக்கலிங்கபுரம் பாரதி தெருவை சேர்ந்தவர் சேர்மன்துரை (வயது 42). டிரைவர். இவருடைய மகள் கீதா (19). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ்-2 முடித்தார். அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் டிப்ளமோ நர்சிங் படித்து வந்தார். தற்போது 2-ம் ஆண்டு படித்த அவர் ஆஸ்பத்திரியின் தேரகால்புதூரில் உள்ள செவிலியர் மற்றும் பயிற்சி செவிலியர் தங்கும் விடுதியில் தங்கி படித்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் பயிற்சி முடிந்ததும் இரவு அவர் தங்கியிருக்கும் அறைக்கு சென்றார். பின்னர் அவர் தனது செல்போன் மூலம் தந்தையிடம் பேசியதாக கூறப்படுகிறது. இரவு வழக்கம்போல் தூங்க சென்ற அவர் நேற்று காலையில் விடுதியில் உள்ள குளியலறையில் துப்பட்டாவால் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் ஆஸ்பத்திரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே அவர்கள் மூலம் வடசேரி போலீசுக்கும், மாணவியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் மேரி மெரிபா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பிறகு தூக்கில் பிணமாக தொங்கிய கீதாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே மாணவி கீதாவின் தந்தை சேர்மன்துரை நாகர்கோவிலுக்கு வந்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கீதாவின் தற்கொலைக்கான காரணம்? உடனடியாக தெரியவில்லை. அதே சமயத்தில் போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், கீதா அதிகமாக யாரிடமும் பேசமாட்டார். ஆனால் செல்போனில் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு கீதா யார்? யாருடன் செல்போனில் பேசியுள்ளார் என்ற விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. தனியார் ஆஸ்பத்திரி விடுதி குளியலறையில் நர்சிங் மாணவி தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்