குற்றாலம் டாக்டர் வீட்டில் திருடிய பிரபல கொள்ளையர்கள் கைது
குற்றாலத்தில் டாக்டர் வீட்டில் திருடிய பிரபல கொள்ளையர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14¼ பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரந்திர் சக்கரபதி. இவர் தென்காசி அருகே உள்ள மத்தளம்பாறையில் இயங்கி வரும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இவர் குற்றாலம் ராமாலயம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கியிருந்து வருகிறார். சம்பவத்தன்று பிரந்திர் சக்கரபதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். மறுநாள் காலையில் அவரது வீட்டில் வேலை பார்க்கும் வேலம்மாள் என்பவர் அங்கு சென்று பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பிரந்திர் சக்கரபதிக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, 14¼ பவுன் தங்க நகைகள் மற்றும் சில பொருட்கள் திருட்டு ேபானது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் குற்றாலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் முககவசம் அணிந்த ஒருவர் வீட்டுக்குள் செல்வது பதிவாகி இருந்தது தெரியவந்தது. அதனை வைத்து போலீசார் துப்பு துலக்கினர். தென்காசி துணை போலீஸ் சூப்பிரண்டு நாகசங்கர் உத்தரவின் பேரில் குற்றாலம் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, சுந்தரி மற்றும் போலீசார் குற்றாலம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி அதில் வந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் கன்னியாகுமரி அழகர்பாறை பகுதியைச் சேர்ந்த மணி மகன் வேல்முருகன் (வயது 36), வீரவநல்லூரை சேர்ந்த பெருமாள் மகன் மந்திரமூர்த்தி (33), வீரவநல்லூர் மேல புதுக்குடி வடக்கு தெருவை சேர்ந்த தேவசகாயம் மகன் டேனியல் பிரகாஷ் (36) ஆகியோர் என்பதும், டாக்டர் வீட்டில் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்த அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 14¼ பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டன. மேலும் காரும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 3 பேரும் பிரபல கொள்ளையர்கள் என்பதும், அவர்கள் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்து உள்ளது. டாக்டர் வீட்டுக்குள் முககவசம் அணிந்தபடி சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவானது, வேல்முருகன் தான் என்பதும் தெரியவந்தது. டேனியல் பிரகாஷ் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.