பிரபல கொள்ளையன் கைது; 20 பவுன் நகைகள் மீட்பு
நாகர்கோவிலில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.;
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டது.
போலீசார் ரோந்து
குமரி மாவட்டத்தில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. எனவே கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும், தீவிர ரோந்து பணியும் நடந்து வருகிறது.
இந்தநிலையில் வடசேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு வடசேரி பஸ் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். உடனே போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.
பிரபல கொள்ளையன் கைது
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனை தொடர்ந்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் அந்த வாலிபர் பிரபல கொள்ளையன் என்ற தகவல் வெளியானது.
அதாவது நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியை சேர்ந்த சரண் (வயது 25) என்பதும், இவர் மீது ஏற்கனவே பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, வடசேரி, கோட்டார் மற்றும் தூத்துக்குடி ஆகிய போலீஸ் நிலையங்களில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன என்பதும் தெரிய வந்தது.
மேலும் அவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வடசேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மேற்கூரையை பிரித்து உள்ளே இறங்கி 4½ பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரத்தை திருடியது விசாரணையில் அம்பலமானது. பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரணை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மொத்தம் 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.