பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது

அரகண்டநல்லூரில் பிரபல மோட்டார் சைக்கிள் திருடன் கைது 12 வாகனங்கள் பறிமுதல்

Update: 2023-09-03 18:45 GMT

திருக்கோவிலூர்

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ், ஏட்டு தேவநாதன் மற்றும் போலீசார் தேவனூர் கூட்டு ரோடு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணான பதில் கூறியதால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அரகண்டநல்லூர் அருகே உள்ள அருணாபுரம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் பார்த்தா என்கிற பார்த்திபன்(வயது 26) என்பதும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் திருடி அதை உடனுக்குடன் விற்று கிடைக்கும் பணத்தில் ஜாலியாக ஊர் சுற்றியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து பார்த்திபனை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 12 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். இந்த மோட்டார் சைக்கிள்கள் அரகண்டநல்லூர், கெடார், செஞ்சி, அனந்தபுரம் பகுதியில் திருடியவையாகும். மேலும் பார்த்திபனை காவலில் எடுத்து விசாரணை செய்து இதர இடங்களில் திருடிய மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்