அழகுராஜ பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்
தக்கோலம் அழகுராஜ பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தில் மங்கள நாயகி உடனுறை அழகு ராஜ பெருமாள் கோவில் பராமரிப்பு இன்றி கிடந்தது. கால போக்கில் கோவில் பாழடைந்து போனதால் கோவில் வளாகத்தை சுற்றிலும் சுமார் 53 குடும்பங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவிலை புனரமைக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து அங்கேயே இருந்து வந்த நிலையில் இந்து அறநிலை துறையினர் கோவில் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்று நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து தக்கோலம் கிராம நிர்வாக அலவலர் கார்த்திக்கிடம் கேட்ட போது ஆக்கிரமிப்பாளர்கள் 53 பேருக்கு அரக்கோணம் தாசில்தார் பழனிராஜன் தலைமையிலான வருவாய் துறையினர் மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.