திருப்பூரில் சூடுபிடிக்காத தீபாவளி வியாபாரம்

திருப்பூரில் சூடுபிடிக்காத தீபாவளி வியாபாரம்

Update: 2022-10-19 13:34 GMT

திருப்பூர்திருப்பூரில் சூடுபிடிக்காத தீபாவளி வியாபாரம்

இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். தீபாவளியன்று புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து விதவிதமான இனிப்பு, கார வகைகளை தயாரித்து பக்கத்து வீட்டுக்காரர், உறவினர்களுக்கு கொடுத்து கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு தீபாவளி வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீப விளக்குகளை வரிசையாக ஏற்றி வழிபடும் நாளாக அமைகிறது. மக்கள் எந்தவித பாகுபாடு இல்லாமல் அன்றைய தினம் புத்தாடை அணிந்து கொண்டாடி வருகிறார்கள்.

தீபாவளி பண்டிகைக்கு முன் புத்தாடை வாங்க ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதும். அதுபோல் பட்டாசு கடைகளின் விற்பனை பட்டையை கிளப்பும். மளிகை கடைகளில் வியாபாரம் சிறப்பாக அமையும். இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்யும் கடைகளிலும் விற்பனை களை கட்டும். ஆனால் இந்த ஆண்டு திருப்பூரில் தீபாவளி பண்டிகை விற்பனை என்பது மந்தகதியிலேயே இருக்கிறது. வியாபாரிகளின் எதிர்பார்ப்பு பூர்த்தியாகவில்லை. குறிப்பாக கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை ஒப்பிடும்போது 50 சதவீதம் அளவுக்கே வியாபாரம் இதுவரை நடந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கிறார்கள்.

பருப்பு வகைகள்

இதற்கு முக்கிய காரணம் டாலர் சிட்டியான திருப்பூரில் பனியன் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த தொழில் நிறுவனங்களில் சரிவர வேலையில்லாத நிலை தான். நூல் விலை அபரிமிதமான உயர்வு காரணமாக பனியன் நிறுவனங்கள் புதிய ஆர்டர்களை எடுத்து செய்யாமல் உற்பத்தியை நிறுத்தினார்கள். இதன்விளைவாக தொழிலாளர்களுக்கு வேலையிழப்பு ஏற்பட்டது. ஆடை தயாரிப்பு ஆர்டர் குறைந்ததால் அதை நம்பியுள்ள ஜாப்ஒர்க் நிறுவனங்கள் வேலை இழந்தது. சங்கிலித்தொடர் போல் அடுத்தடுத்து பாதிக்க, கடைசியாக டீக்கடை, மளிகை கடை, பெட்டிக்கடை வரை வியாபார மந்தநிலையை சந்தித்து விட்டது. மக்களின் பணப்புழக்கம் குறைந்ததால் தீபாவளி பண்டிகை விற்பனை என்பது மிகவும் குறைவாகவே இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மளிகை கடைகளில் கூட கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. பலகாரம் செய்வதற்கு எண்ணை, பருப்பு வகைகள் அதிகம் வாங்குவார்கள். துவரம் பருப்பு கிலோ ரூ.131-க்கும், பாசிப்பருப்பு ரூ.106-க்கும், உளுந்து ரூ.128-க்கும், கடலை பருப்பு ரூ.77-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த பருப்புகளின் விலையை விட தற்போது கிலோவுக்கு ரூ.10 அதிகரித்துள்ளதாக மளிகைக்கடை மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை விற்பனையை விட தற்போது 50 சதவீதம் அளவுக்கே வியாபாரம் நடந்துள்ளது. தொழில் பாதிப்பால் மக்களிடம் பணப்புழக்கம் குறைந்து விட்டதால் மளிகை கடைக்கு வருபவர்கள் குறைந்த அளவுக்கே பொருட்களை வாங்கி செல்கிறார்கள் என்றனர்.

பட்டாசு விற்பனை சரிவு

இதற்கு அடுத்ததாக எண்ணெய் கடைகளில் வியாபாரமும் குறைவாகவே உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் கிலோ கணக்கில் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி கடலை எண்ணெய் ரூ.213-க்கும், தேங்காய் எண்ணெய் ரூ.165-க்கும், நல்லெண்ணெய் ரூ.266-க்கும், சன்பிளவர் ஆயில் ரூ.178-க்கும், பாமாயில் ரூ.115-க்கும், வெண்ணெய் ரூ.520-க்கும், நெய் ரூ.680-க்கும் விற்பனையானது. கடந்த ஆண்டை விட எண்ணெய் விலை 5 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளது. இருப்பினும் மக்கள் வாங்கும் அளவு குறைந்து விட்டது. கடந்த ஆண்டு 15 கிலோ டின் எண்ணெய் வாங்கி சென்றவர்கள், பெரும்பாலும் 5 கிலோ டின் வாங்கி செல்கிறார்கள். வாங்கும் சக்தி மக்களிடம் குறைந்து விட்டது. பனியன் தொழிலாளர்களிடம் பணப்புழக்கம் இல்லை. வியாபாரமும் பெருமளவு சரிந்து விட்டது என்று எண்ணெய் மொத்த வியாபாரிகள் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் அதிகம் இருப்பதால் சிவகாசியில் உள்ள முன்னணி நிறுவனங்கள் திருப்பூரில் மொத்த விற்பனை கடை அமைத்து பட்டாசுகளை விற்பனை செய்து வருகிறார்கள். ஆனால் இந்த ஆண்டு பட்டாசு விற்பனையும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்றே கூறுகிறார்கள். மூலப்பொருட்களின் விலை உயர்வால் கடந்த ஆண்டை விட பட்டாசு விலை 35 சதவீதம் உயர்ந்து விட்டது. அடுத்து சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு குறைவாக உள்ள பசுமைபட்டாசுகளை விற்பனை செய்யவே ஊக்குவிக்கிறார்கள். அதிக ஒலி எழுப்பும் வெடிகளை குறைத்து இரவு நேரத்தில் பல வண்ணங்களில் ஒளிரும் மத்தாப்பு, வாண வெடிகளையே அதிகம் தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். பட்டாசு விற்பனையும் கடந்த ஆண்டை விட மிகவும் குறைவாகவே உள்ளது. குறிப்பாக பனியன் நிறுவனங்களில் கிப்ட் பாக்ஸ்கள் தொழிலாளர்களுக்கு கொடுப்பார்கள். அதனால் மொத்தமாக பட்டாசுகளை வாங்கி சென்றனர். ஆனால் இந்த ஆண்டு பட்டாசு கிப்ட் பாக்ஸ் வியாபாரம் மிகவும் குறைந்து விட்டது. பனியன் நிறுவனங்களில் இருந்து மொத்த ஆர்டர்கள் அதிகம் வரவில்லை. பட்டாசு விலை உயர்வு ஒருபுறம் இருந்தாலும் லாபத்தை குறைத்து விற்பனை செய்தாலும் மக்கள் வந்து வாங்குவது குறைந்து விட்டது. பெட்டி, பெட்டியாக பட்டாசுகளை வாங்கி குவித்த மக்கள் தற்போது பட்டாசுகளை சிக்கனமாக வாங்கி செல்கிறார்கள் என்றனர்.

வியாபாரம் சூடுபிடிக்கவில்லை

இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் கடைக்காரர்கள் கூறும்போது, இனிப்பு 1 கிலோ ரூ.300-க்கும், கார வகைகள் கிலோ ரூ.240-க்கும் விற்பனை செய்கிறோம். கடந்த தீபாவளியை விட இனிப்பு, கார வகைகள் விலை பெரிய அளவில் உயரவில்லை. இருப்பினும் இந்த ஆண்டு தீபாவளி விற்பனை என்பது எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. பொதுமக்கள் வாங்குவார்கள் என்ற எண்ணத்தில் இனிப்பு, கார வகைகளை தயாரித்து தயாராக வைத்துள்ளோம். தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. ஆனால் இதுவரை விற்பனை என்பது மிகவும் குறைவே. கிப்ட் பாக்ஸ் இனிப்பு வகைகள் விற்பனை பெரிதும் குறைந்து விட்டது. இனிப்பு தயாரிப்பவர்களின் வியாபாரம் இனிக்கவில்லை என்கிறார்கள்.

ஜவுளிக்கடைகளின் வியாபாரமும் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது. ஆடைகளின் விலை 2 மடங்கு உயர்ந்து விட்டது. நடுத்தர குடும்பத்தினர் ஜவுளிக்கடைக்கு சென்று ரூ.5 ஆயிரத்தில் 5 பேருக்கு ஆடைகளை வாங்கி வந்த நிலை மாறி, இப்போது 2 பேருக்கே வாங்கிக்கூடிய வகையில் விலை ஏறியுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் தீபாவளி விற்பனை களைகட்டி காணப்படும். ஆனால் கடந்த ஞாயிற்றுகிழமையன்றே திருப்பூரில் உள்ள ஜவுளிக்கடைகளில் கூட்டம் காணப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை வியாபாரத்தை பெருமளவு எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டை விட இந்த தீபாவளி விற்பனை இன்னும் சூடுபிடிக்காமல் இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கூறியதாவது:-

நளினி (பாரப்பாளையம்-துணி வியாபாரி):-

நான் 15 ஆண்டுகளாக ஸ்கூட்டரில் ஊர்ஊராக சென்று துணிகளை விற்பனை செய்கிறேன். கடந்த காலங்களை போன்று வியாபாரம் தற்போது இருப்பதில்லை. தீபாவளி சமயத்தில் ஒரு நாளில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை விற்பனை நடைபெறும். ஆனால் தற்போது ரூ.1000-த்திற்கு கூட விற்பனையாகவில்லை. கொரோனா சமயத்தில் ஜவுளிக்கடைகள் திறக்கப்படாததால் எங்களுக்கு வியாபாரமும் நன்றாக இருந்தது. ஆனால் இந்த தீபாவளி பண்டிகைக்கு நிலைமை அதைவிட மோசமாக உள்ளது.

ஓம்பிரகாஷ் (துணி கடை உரிமையாளர்):-

பொதுமக்கள் வீடுகளில் இருந்துகொண்ேட ஆன்லைன் மூலம் துணி வாங்கும் கலாசாரம் அதிகரித்துவிட்டது. ஆனால் ஆன்லைனின் வாங்கும்போது தாங்கள் நினைத்த வண்ணம் ஆடைகள் கிடைக்காததால் ஏமாற்றம் அடைகின்றனர். ஆன்லைன் மூலம் மக்கள் துணிகள் வாங்குவதால் துணி கடைகளில் வியாபாரம் குறைந்து விட்டது. இதனால் கடை வாடகை, மின்கட்டணம் கட்டமுடியாமல் வருமானம் இன்றி அவதிப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை விட இந்த ஆண்டு துணிகளின் விலை அதிகரித்துள்ளது. குறிப்பாக கடந்த ஆண்டு ரூ. 300-க்கு விற்கப்பட்ட சர்ட், தற்போது ரூ.350-க்கு விற்பனையாகிறது. ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட பேண்ட் தற்போது ரூ.500-க்கு விற்கப்படுகிறது. ரூ.300-க்கு விற்கப்பட்ட சேலை ரூ.400-க்கு விற்பனையாகிறது. ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்ட நைட்டி ரூ.300 விற்கப்படுகிறது. ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்ட பிட் துணிகள் (மெட்டிரியல்ஸ்) ரூ.500-க்கு விற்பனையாகிறது. நூல் விலை உயர்வு போன்ற காரணங்களால் துணிகளின் விலை உயர்ந்துள்ளது. விலை உயர்வால் பொதுமக்கள் துணிகள் வாங்குவதற்கு தயங்குகின்றனர்.

பூமாதேவி (இல்லத்தரசி):-

நான் கல்லாங்காடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். தீபாவளியை முன்னிட்டு துணிகள் வாங்க பல கடைகளுக்கு சென்றேன். எல்லா கடைகளிலும் துணிகளின் விலை உயர்ந்தே காணப்படுகிறது. ரூ.3 ஆயிரத்திற்கு விற்கப்பட்ட குழந்தைகளுக்கான ஆடை தற்போது ரூ.3900-க்கு விற்கப்படுகிறது.

கடந்த தீபாவளி பண்டிகைக்கு குழந்தைகளுக்கு ரூ.2 ஆயிரத்தில் 4 ஆடைகள் எடுத்தேன். ஆனால் தற்போது ஒரு ஆடைக்கே ரூ.1500 ஆகிறது. எனவே இன்றைய சூழ்நிலையில் ரூ.5 ஆயிரத்திற்கு ஆடைகள் வாங்க வேண்டி இருக்கிறது. இதனால் நடுத்தர மக்கள் அதிகம் சிரமம் அடைகின்றனர். இதனால் வருமானத்தில் பெரும்பாலான பணம் துணிகள் வாங்குவதற்கு செலவாகிறது.

சிவக்குமார் (பட்டாசு கடை வியாபாரி):-

வெடி மருந்து பொருட்களான பேரியம் நைட்ரேடு மற்றும் அலுமினியம் பவுடர் விலை அதிகரித்ததால் பட்டாசு விலை கடந்த ஆண்டை விட தற்போது உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பட்டாசு வாங்குவதில் சுணக்கம் காட்டுகின்றனர். இதன்காரணமாக பட்டாசு விற்பனை குறைந்துள்ளது. நிறைய பேர் பட்டாசுகளின் விலையை விசாரித்து செல்கின்றனர். ஆனால் திரும்பி வந்து வாங்குவதில்லை.

கடந்த ஆண்டு தீபாவளி சமயத்தில் ரூ.70-க்கு விற்கப்பட்ட 7 செ.மீ. கம்பி மத்தாப்பூ, தற்போது ரூ.25 அதிகரித்து ரூ.95-க்கு விற்கப்படுகிறது. அதேபோல் ரோல் கேப் ரூ.35-க்கு விற்கப்பட்டது, தற்போது ரூ.50-க்கு விற்கப்படுகிறது. கிப்ட் பாக்ஸ் ரூ.375 விற்கப்பட்டது, தற்போது 2 மடங்கு அதிகரித்து ரூ.600-க்கு விற்கப்படுகிறது. விசிலிங் ராக்கெட் ரூ.100-க்கு விற்பனையானது. தற்போது ரூ.190-க்கு விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குறைந்த அளவிலேயே பட்டாசு வாங்குகின்றனர்.

வெங்கடேஷ் (மளிகை கடை வியாபாரி):-

கடந்த தீபாவளியை விட இந்த ஆண்டு மளிகை பொருட்கள் விற்பனை 50 சதவீதம் குறைந்துள்ளது. பொதுமக்கள் தீபாவளியையொட்டி பலகாரம் செய்ய பொருட்கள் வாங்க வருவார்கள். ஆனால் தற்போது வரை மளிகை பொருட்கள் வாங்க வரவில்லை. ஞாயிற்றுக்கிழமைகளில் விற்பனை நன்றாக இருக்கும். ஆனால் கடந்த 2 வாரமாக ஞாயிற்றுக்கிழமைகளிலும் வியாபாரம் நடைபெறவில்லை. மந்தமாகவே விற்பனை உள்ளது.

மேலும் விலைவாசி உயர்வு, வரி உயர்வு காரணமாக மளிைக பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பலகாரம் செய்வதை குறைத்துள்ளனர்.

ஆக்னஸ் மேரி (ராக்கியாபாளையம்-பொதுமக்கள்):-

தீபாவளியை முன்னிட்டு மளிகை பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. 1 கிலோ சீரகம் கடந்த ஆண்டு ரூ.280-க்கு விற்கப்பட்டது. தற்போது ரூ.320-க்கு விற்கப்படுகிறது. வருமானமும் குறைந்துள்ளதால் பொதுமக்கள் மளிகை பொருட்கள் வாங்க சிரமப்படுகின்றனர். எனவே அரசு விலை வாசி உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சரவணன் (இனிப்பு கடை உரிமையாளர்):-

தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒருவார காலமாகவே வியாபாரம் நடைபெறவில்லை. இனிப்பு, பலகாரம் செய்யும் ஆர்டர்களும் குறைந்துள்ளது.இனிப்பு, பலகாரம் செய்ய பயன்படும் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. இதனால் இனிப்பு வகைகளின் விலையையும் உயர்த்தும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்கள் இனிப்பு, பலகாரம் வாங்கும், ஆர்டர்கள் தரவும் யோசிக்கிறார்கள்.

மகேஸ்வரி, (எஸ்.வி.காலனி-பொதுமக்கள்):-

கொரோனாவிற்கு பிறகு இனிப்பு, கார வகைகளின் விலை அதிகரித்துவிட்டது. ஒரு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட இனிப்பு, தற்போது ரூ.700-க்கு விற்கப்படுகிறது. நெய்யில் செய்யப்படும் இனிப்பு 1 கிலோவிற்கு ரூ.200 அதிகரித்துள்ளது. அதேபோல் எண்ணெயில் செய்யப்படும் இனிப்பு ரூ.100 அதிகரித்துள்ளது. இதனால் இனிப்பு வாங்குவதற்கு மக்கள் தயக்கம் காட்டுகின்றனர். எனவே அடுத்த வருட தீபாவளி பண்டிகையாவது சிறப்பாக அமைய வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம்.

இவ்வாறு கடை உரிமையாளர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்