தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடற்கரையோர மாவட்டங்களில் ஒன்றான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று பகல் முழுவதும் லேசான மழை விட்டு விட்டு பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறையில் 39 மில்லி மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தின் மற்ற பகுதிகளில் பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:- மணல்மேடு - 26, சீர்காழி-19, கொள்ளிடம்-16, தரங்கம்பாடி-5. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று பகல் முழுவதும் மழை பெய்யவில்லை. இதமான வெயில் காணப்பட்டது. வயல்களில் தேங்கிய மழை நீர் படிப்படியாக வடிய தொடங்கியது.