களை எடுக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள்
நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் களை எடுக்கும் பணியில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த மூன்று மாதங்களாக நல்ல மழை பெய்தது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பியது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்ததால் விவசாயம் செய்ய போதுமான அளவு நீர் கிடைத்தது. இதனால் சொர்ணவாரி பருவ பயிர் அறுவடை பணிகள் கடந்த மாதம் முடிவுற்றது.
தொடர்ந்து தற்போது சித்திரை பட்ட பயிர் செய்ய நாற்றுவிடும் பணி முடிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு நெமிலி சுற்றுவட்டார பகுதிகளில் நடவு பணிகளும் முடிவுற்றது. இந்தநிலையில் நேற்று சிறுவளையம், கர்ணாவூர், உளியநல்லூர் ஆகிய பகுதிகளில் நெற்பயிரில் களை எடுக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டன்னர்.
இதுகுறித்து விவசாயி கூறுகையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய தொழில் செய்துவருகிறேன். ஆனால் தற்போது விவசாயம் செய்ய மிகவும் கடினமாக உள்ளது. காரணம் நடவு மற்றும் களை எடுக்கும் பணிக்கு உள்ளுர்களில் இருந்து பணியாளர்கள் சரியாக வருவதில்லை.
இதனால் வடமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து நடவு மற்றும் களை எடுக்கும் பணியில் ஈடுபடுத்தவேண்டிய சூழல் ஏற்பட்டது என்றார். வடமாநில தொழிலாளர்கள் கூறுகையில் எங்களுக்கு போதுமான அளவு சம்பளம், தங்குவதற்கு இடம், உணவு கிடைக்கிறது. ஒரு மாதம் இங்கு தங்கி களை எடுக்கும் பணியை முடித்துவிட்டு ஊருக்கு சென்றுவிடுவோம் என்று கூறினர்.