டேங்கர் லாரி வெடித்து வடமாநில தொழிலாளி பலி

டேங்கர் லாரி வெடித்து வடமாநில தொழிலாளி பலி

Update: 2023-08-30 18:45 GMT

கோவை

கோவை அருகே டேங்கர் லாரியின் மூடியை அகற்ற வெல்டிங் வைத்த போது வெடித்ததில் வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார். மற்றொருவர் படுகாயம் அடைந்தார்.

தண்ணீர் லாரியாக மாற்றும் பணி

கோவை மலுமிச்சம்பட்டி போடிபாளையம் ரோட்டில் ஒரு வெல்டிங் ஒர்க் ஷாப் இயங்கி வருகிறது. இங்கு வெல்டிங் தொழிலாளர்களாக வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி புரிகின்றனர். இங்கு டேங்கர் லாரிகள் பழுது பார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம்.

இந்த நிலையில் போத்தனூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் தனக்கு சொந்தமான டேங்கர் லாரியை பழுது பார்த்து தண்ணீர் லாரியாக மாற்ற முடிவு செய்தார். இதையடுத்து அவர் போடிபாளையம் ரோட்டில் உள்ள மேற்கண்ட ஒர்க் ஷாப்பில் தனது டேங்கர் லாரியை கொண்டு சென்றார்.

வெல்டிங் பணி

இந்த டேங்கர் லாரியானது பர்னஸ் ஆயிலை கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று காலை இந்த டேங்கர் லாரியின் மேற்புறம் உள்ள மூடியை வெல்டிங் ஊழியர்கள் திறக்க முயன்றனர். ஆனால் கடுமையாக முயற்சி செய்தும் டேங்கரின் மூடியை திறக்க முடியவில்லை. இதையடுத்து அந்த மூடியை வெல்டிங் மூலம் அகற்ற முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து அந்த ஒர்க் ஷாப்பில் பணிபுரியும் உத்ரபிரதேச மாநிலம் மஹராஜ்கஞ்சி மாவட்டத்தை சேர்ந்த ஒகில் (வயது 38), ரவி (19) ஆகியோர் வெல்டிங் கருவிகளுடன் சென்றனர். இதில் ஒகில் டேங்கர் லாரியின் மேலே ஏறி வெல்டிங் மூலம் மூடியை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அவருக்கு உதவியாக ரவி டேங்கர் லாரியின் அருகே கீழே நின்று கொண்டிருந்தார்.

பலத்த சத்தத்துடன் வெடித்தது

ஒகில் டேங்கர் லாரி மூடியில் வெல்டிங் வைத்த சிறிது நேரத்தில் லாரியானது பலத்த சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் ஒகில் தூக்கி வீசப்பட்டார். இதில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். லாரிக்கு அருகில் நின்று கொண்டிருந்த ரவியும் படுகாயமடைந்தார்.

லாரி வெடிக்கும் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். பின்னர் காயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ரவியை மீட்டு கோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி தகவல் அறிந்து வந்த கிணத்துக்கடவு தீயணைப்பு துறையினர் டேங்கர் லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கிய டேங்கர் லாரி உருக்குலைந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த மதுக்கரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கு இறந்து கிடந்த ஒகிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேங்கர் லாரி வெடித்தது ஏன்?

இந்த டேங்கர் லாரி பர்னஸ் ஆயில் கொண்டு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளது. லாரியின் மூடி இறுக்கமாக மூடப்பட்டு இருந்ததது. இதன்காரணமாக டேங்கர் லாரிக்குள் கியாஸ் உருவாகி இருந்தது. பொதுவாக இது போன்ற டேங்கர் லாரிகளை பழுது பார்ப்பதற்கு முன், லாரியின் மூடியை ஊழியர்கள் திறந்து விடுவார்கள். அப்போது டேங்கருக்குள் இருக்கும் கியாஸ் வெளியேறி காற்றுடன் கலந்து விடும். ஆனால் இந்த டேங்கர் லாரியில் மூடியை திறக்க முடியாததால் வெல்டிங் மூலம் மூடியை அகற்ற முயன்றனர். அப்போது வெல்டிங் காரணமாக தீப்பொறிகள் பட்டு சிதறியதால் டேங்கரில் இருந்த கியாஸ் பற்றி எரிந்து வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்