அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியின் போது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வடமாநில சிறுவன் பலி

ஆவடி அருகே அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுமான பணியின் போது 8-வது மாடியில் இருந்து தவறி விழுந்து வட மாநில சிறுவன் பலியானான்.

Update: 2023-04-12 04:37 GMT

ஆவடி அடுத்த பருத்திப்பட்டு பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் அமைந்துள்ளன. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட வடமாநில கட்டுமான தொழிலாளர்கள் அங்கேயே தங்கி 800 குடியிருப்புகள் கொண்ட 3-வது விரிவாக்க கட்டுமான பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அதில் கடந்த 15 நாட்களாக தங்கியிருந்து மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ரபி உல் ஹக் (வயது 15) என்ற சிறுவன் கட்டிட வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் அணியாமல் சிறுவன் ரபி உல் ஹக் கட்டிட வேலை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென 8-வது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்ததில், பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதையடுத்து கட்டிட மேற்பார்வையாளர் அளித்த தகவலின் பேரில் ஆவடி போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை செய்தனர். பின்னர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், திருநின்றவூர் இந்திரா நகரை சேர்ந்த ஷாஜகான் (50), பொன்னேரி சக்தி நகரை சேர்ந்த மேலாளர் கந்தசாமி (51), மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த என்ஜினீயர் ரூபன் உசேன் (24) ஆகிய 3 பேரிடமும் விசாரித்து வருகின்றனர். வட மாநில சிறுவன் கட்டிட வேலை செய்யும் போது தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்