ராணிப்பேட்டை: பாலீஷ் செய்வதாக தங்க நகையுடன் தப்பியோடிய வடமாநில இளைஞர்கள் - துரத்தி பிடித்த பொதுமக்கள்

தங்க நகையை பாலீஷ் செய்வதாக கூறி 3 பவுன் தங்க செயினை வடமாநில இளைஞர்கள் வாங்கியுள்ளனர்.

Update: 2023-03-04 14:37 GMT

ஆற்காடு,

ராணிப்பேட்டை  மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தாழனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், விவசாயி. இவரின் மனைவி தேவி (வயது 40). இவர், நேற்று காலை வீட்டில் இருந்தபோது, 2 இளைஞர்கள் வந்து தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறினர்.

அதற்கு தேவி, அதெல்லாம் வேண்டாம், எனக் கூறினார். எனினும், வாலிபர்கள் கட்டாயப்படுத்தி அவரிடம் இருந்து 3 பவுன் தங்க ஜெயினை வாங்கி, அதன் மீது ஆசிட் திராவகத்தை ஊற்றினர்.

அதில் அந்த தங்க ஜெயின் கரைந்து துண்டு துண்டாக சிதைந்தன. இதை பார்த்த தேவி கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளாா். உடனே அங்கிருந்து 2 இளைஞர்களும் தப்பியோடினர்.

தேவியின் கூச்சல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் மோட்டார்சைக்கிளில் துரத்தி சென்று 2 இளைஞர்களையும் மடக்கி பிடித்து, ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் 2 பேரும் வடமாநிலமான பீகார் மாநிலம் மத்திய புரஜில்லா ராட்டா பகுதியை சேர்ந்த மிதுன்குமார் (21), முகேஷ்குமார் (24) என்பது தெரிய வந்தது. தங்க ஜெயினுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறி ஏமாற்றி ஜெயினை பறித்துக்கொண்டு ஓடிய வடமாநில இளைஞர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையர்கள் மீது வழக்குப்பதிவு செய்து ஆசிட் திராவக பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் சமீப நாட்களாக கொள்ளை சம்பவங்களில் வட இந்தியாவை சேர்ந்த கொள்ளைகும்பல்கள் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்