வடகிழக்கு பருவமழை அதிகாரிகள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் -கமிஷனர் ராதாகிருஷ்ணன்
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் அனைத்து அதிகாரிகளும் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும் என மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், கூடுதல் கமிஷனர்கள் சங்கர்லால் குமாவத், லலிதா, இணை கமிஷனர் ஜி.எஸ்.சமீரன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் சென்னையில் மாநகராட்சி மற்றும் அதன் தொடர்புடைய சேவைத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பேரிடர் மேலாண்மையை சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், பழைய அனுபவங்களின் அடிப்படையில் முன்கூட்டியே திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பருவமழைக்கு முன்னதாக மழைநீர் வடிகால் பணிகளை முடித்திட வேண்டும். குறிப்பாக, மழைநீர் வடிகால் இணைப்பு பணிகளை முடிக்க வேண்டும். மழைநீர் தேங்கும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைநீர் வடிகால் மற்றும் சென்னை மெட்ரோ ரெயில், நெடுஞ்சாலைத்துறை, மின்துறை உள்ளிட்ட துறைகளின் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
மக்களுக்கு இடற்பாடும், விபத்தும் ஏற்படாத வகையிலும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அடையாறு, கூவம், பக்கிங்காம் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், கட்டிடக்கழிவுகளை ஒருங்கிணைந்து அகற்ற வேண்டும். மழைக்காலங்களில் மக்களை தங்க வைப்பதற்கான நிவாரண முகாம்களை கண்டறிந்து தயார் நிலையில் வைக்க வேண்டும். மின்மோட்டார், ஜெனரேட்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பள்ளி கட்டிடங்கள், ஆஸ்பத்திரிகள் உள்ளிட்ட முக்கிய கட்டிடங்களின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். இதேபோல, சுகாதாரத்துறை மூலம் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் அமைப்பதற்கான வசதிகளை தயார் நிலையில் வைத்து, மருந்துகளின் இருப்பை உறுதி செய்ய வேண்டும். எனவே, அனைத்து அதிகாரிகளும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் முன்கூட்டியே திட்டமிட்டு விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.