சேமிப்பு திட்டம் முடிந்தும் பணத்தை திருப்பி செலுத்தாதநிதி நிறுவனம் ரூ.1 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக வழங்க வேண்டும்-மாவட்ட நுகர்வோா் குறைதீர் ஆணையம் உத்தரவு
சேமிப்பு திட்டம் முதிர்வடைந்தும் பணம் திருப்பி தராத நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
ஊட்டி
சேமிப்பு திட்டம் முதிர்வடைந்தும் பணம் திருப்பி தராத நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
6 ஆண்டுகள் சேமிப்பு
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த போர்த்தி கிராமத்தை சேர்ந்தவர் மோகன கிருஷ்ணன். இவரிடம், கோவை சித்தாபுதூரில் இயங்கி வரும் ஆசீர்வாத் கூட்டுறவு உற்பத்தி நிறுவனம், மாதம் ரூ.1000 வீதம் 6 ஆண்டுகளில் ரூ.72 ஆயிரம் கட்டினால், இறுதியில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் அசலுடன் சேர்த்து திருப்பி தரப்படும் என்று கூறி உள்ளது.
இதை நம்பிய மோகன கிருஷ்ணன் 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ரூ.72 ஆயிரம் செலுத்தியுள்ளார். இதற்கிடையே மோகன கிருஷ்ணன் சில தவணைகள் தாமதமாக கட்டியதற்காக அபராதமாக ரூ.4,366 வசூலிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து திட்டம் நிறைவடைந்தும் பலமுறை கேட்டும் அவருக்கு பணம் திருப்பி கொடுக்கப்படவில்லை.
உடனடியாக வட்டியுடன் வழங்க வேண்டும்
இதைத் தொடர்ந்து மோகன கிருஷ்ணன் குன்னூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தை அணுகினார். இந்த சங்கத்தின் செயலாளரும், வக்கீலுமான ஆல்துரை மத்திய பிரதேசத்தில் உள்ள ராஞ்சி மற்றும் ராய்ப்பூரில் உள்ள நிறுவனத்தின் தலைமை அலுவலகங்களுக்கு இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பினார். ஆனால் இது போன்ற எந்த நிறுவனமும் எங்கள் கட்டுப்பாட்டில் செயல்படவில்லை என்று கூறி கடிதங்கள் திரும்பி வந்தன. கோவையில் உள்ள அலுவலகத்திலும் இதற்கு சரியான பதில் அளிக்கவில்லை. எனவே நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நுகர்வோர் ஆணைய தலைவர் சித்ரா மற்றும் உறுப்பினர் சசிராஜா ஆகியோர் தீர்ப்பளித்தனர்.
இதன்படி மோகன கிருஷ்ணனுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 18 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும், நுகர்வோருக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக ரூ.10 ஆயிரமும், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கோவையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர். 2 மாத காலத்திற்குள் இந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என்று நுகர்வோர் ஆணைய தலைவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.