பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் மாநகருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது; குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் மாநகருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-03-16 18:47 GMT

நாகர்கோவில்

பேச்சிப்பாறை அணையில் இருந்து நாகர்கோவில் மாநகருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

குறைதீர்க்கும் கூட்டம்

குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வருவாய் அதிகாரி சிவப்பிரியா முன்னிலை வகித்தார். முதலில் விவசாயிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன. இதைத் தொடர்ந்து தென்னை தொழில்நுட்பங்கள் அடங்கிய புத்தகம் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்பட்டது. முன்னதாக வேளாண் தொழில்நுட்பங்கள் காணொலி மூலம் விளக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகளும், விவசாய பிரதிநிதிகளும் வலியுறுத்திய கோரிக்கைகள் விவரம் வருமாறு:-

தண்ணீர் கொடுக்கக்கூடாது

குமரி மாவட்டத்தில் தென்னை வேர்வாடல் நோய் அதிகளவில் பரவி வருகிறது. நோயை கட்டுப்படுத்த அருகே உள்ள குளத்தில் இருந்து மண் எடுத்து தென்னந்தோப்புகளில் போட அனுமதி அளிக்க வேண்டும். புத்தன் அணையில் இருந்து நாகர்கோவில் மாநகருக்கு நேரடியாக தண்ணீர் வழங்க வேண்டும். பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணையில் இருந்து நாகர்கோவில் மாநகருக்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. முக்கடல் அணையை தூர்வாரினாலே தண்ணீர் தட்டுப்பாடு வராது.

சிற்றார் அணை பகுதியில் உள்ள புறம்போக்கு நிலம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது. தற்போது கால்வாய் கரையில் அலங்கார தரைகற்கள் பதிக்கப்படுகிறது. சாலை அமைக்கப்படுகிறது. இப்படியே சென்றால் இன்னும் 5 ஆண்டுகளில் அணையை தூர்வாரி மணலை எங்கும் போட முடியாத நிலை ஏற்படும். பறக்கை நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்.

ஜி.எஸ்.டி. கேட்கிறார்கள்

விவசாய நிலத்தில் இருந்த பட்ட மரங்களை வெட்டி வாகனத்தில் கொண்டு செல்லும் போது வணிக வரித்துறை சார்பில் ஜி.எஸ்.டி. கேட்கிறார்கள்.

விவசாய நிலம் மற்றும் வீடுகளில் உள்ள மரங்களை வெட்டி கொண்டு செல்லும் மரங்களுக்கு ஜி.எஸ்.டி. கேட்டால் என்ன செய்ய முடியும். விளவங்கோடு தாலுகா மாலைக்கோடு மாஞ்சாலுமூடு தாழக்குளம் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வாரி தண்ணீர் நிரப்ப வேண்டும். குமரி மாவட்டத்தில் வருகிற 22-ந் தேதி உலக தண்ணீர் தின விழா நடத்த வேண்டும். மேல கட்டிமாங்கோடு கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைத்துதர வேண்டும். மணவாளக்குறிச்சி பெரிய குளம் பகுதியில் நபார்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். முட்டம் மற்றும் இரட்டைக்கரை கால்வாயில் இந்த மாதம் இறுதி வரை தண்ணீர் விட வேண்டும். நெல் ரகங்களில் அதிக மணி எண்ணிக்கையுடன் கதிர்கள் உருவாக்கிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கலெக்டர் பதில்

இதைத் தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளித்து கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கூறியதாவது:-

தென்னை வேர் வாடல் நோயை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புத்தனார் குடிநீர் திட்டம் தொடர்பாக மாநகராட்சி நிர்வாகத்திடம் பேசப்படும். சிற்றார் அணை பகுதி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். உள்கட்டமைப்பு செய்ய ஊராட்சி தலைவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான தகவல் கிடைத்ததும் தெரிவிக்கப்படும். மரங்களை கொண்டு செல்லும் போது ஜி.எஸ்.டி. கேட்பது தொடர்பாக மனுவாக எழுதி தாருங்கள். விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். குளத்தை தூர்வார வரும் நிதி ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் பணி மேற்கொள்ளப்படும். உலக தண்ணீர் தினம் மற்றும் வார விழாவையொட்டி உபகோட்ட அளவில் நடத்திட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கட்டிமாங்கோடு கிராமத்தில் கால்நடை ஆஸ்பத்திரி அமைக்க சாத்தியக்கூறுகள் இல்லை. மணவாளக்குறிச்சி பெரிய குளம் பகுதியில் ஏப்ரல் 15-ந் தேதிக்குள் பணி முடிவடையும். முட்டம் மற்றும் இரட்டைக்கரை கால்வாயில் வருகிற 20-ந் தேதி வரை தண்ணீர் விடப்படும். நெல் ரகங்களில் அதிக மணி எண்ணிக்கை உருவாக்க சில ரகங்களை பொன்மணியுடன் ஒட்டு சேர்த்து புதிய ரகங்களை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் சந்திரசேகரன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ராஜா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கீதா, தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பாரிவேந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்