9 மாதமாக வீட்டிற்கு மின்சாரம் இல்லை- மாணவிகள் போராட்டம்
பணம் செலுத்தியும் 9 மாதமாக வீட்டுக்கு மின்சாரம் இல்லை என்று பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
பணம் செலுத்தியும் 9 மாதமாக வீட்டுக்கு மின்சாரம் இல்லை என்று பள்ளி மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
பேச்சுவார்த்தை
மதுரை விளாங்குடி பொற்றாமரை நகர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வமூர்த்தி. இவர் பள்ளியில் படிக்கும் தனது 2 மகள்களுடன் மதுரை அரசரடி மின்சார அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அங்கு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களது கையில் மின்சாரம் கிடைக்கும் வரை போராடுவோம் என்று எழுதப்பட்ட பதாகைகள் வைத்திருந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. பின்னர் அங்கு வந்த போலீசார், அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். அப்போது அவர்கள் கோரிக்கை மனு ஒன்று கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் எங்களது வீட்டிற்கு மின்சார இணைப்புக்கோரி 9 மாதங்களுக்கு முன்பு பணம் செலுத்தினோம். ஆனால் இன்னும் எங்கள் வீட்டிற்கு மின்இணைப்பு கொடுக்க வில்லை. இதனால் நாங்கள் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாகி உள்ளோம். எங்கள் வீட்டருகில் விஷப்பூச்சி அதிகமாக உள்ளது. எங்களுக்கு படிப்பதற்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. மேலும் இரவில் கொசுக்கடி அதிகமாக உள்ளது. இரவில் நன்றாக தூங்க முடியாததால் பகலில் பள்ளியில் பாடத்தை நன்றாக கவனிக்க முடியவில்லை. எனவே எங்கள் வீட்டுக்கு உடனடியாக மின் இணைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
சம்மத கடிதம்
இதுகுறித்து மின்சாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
இந்த சிறுமிகளின் போராட்டம் எங்களது கவனத்திற்கு வந்தவுடன், இந்த பிரச்சினை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது அவர்கள் வீட்டிற்கு அடுத்தவர்கள் இடத்தின் வழியாக மின்வயர் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. அதனால் தான் அவர்களது வீட்டுக்கு மின் இணைப்பு கொடுக்க முடியவில்லை. தற்போது அருகில் உள்ள இடத்துக்காரர், சம்மத கடிதம் தருவதற்கு ஒப்புகொண்டு இருக்கிறார். எனவே அங்கு மின் இணைப்பு வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.