வேங்கிக்கால் ஊராட்சி துணை தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் துணை தலைவருக்கு எதிராக மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

Update: 2023-09-05 17:44 GMT

திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற கூட்டத்தில் துணை தலைவருக்கு எதிராக மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

வேங்கிக்கால் ஊராட்சி

திருவண்ணாமலை மாவட்டத்தில் 860 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மிகப் பெரிய ஊராட்சியாக திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால் ஊராட்சி திகழ்கிறது. 12 வார்டுகளைக் கொண்ட இந்த ஊராட்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

தி.மு.க.வை சேர்ந்த சாந்திதமிழ்ச்செல்வன் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இங்கு துணைத் தலைவராக உள்ள பாலா மூர்த்தி ஊராட்சி நிர்வாகத்திற்கு சரிவர ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெறவில்லை என புகார்கள் உள்ளன.

இதனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துணைத் தலைவர் பாலா மூர்த்திக்கு எதிராக மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதனை எதிர்த்து தனக்கு மெஜாரிட்டி காண்பிக்க கால அவகாசம் வழங்கவில்லை என்று ஐகோர்ட்டில் பாலா மூர்த்தி வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த ஐகோா்ட்டு, நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு தடை விதித்தது.

இதனை எதிர்த்து வேங்கிக்கால் ஊராட்சி நிர்வாகம் மூலம் மீண்டும் ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, மீண்டும் தாசில்தார் தலைமையில் கூட்டம் நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென தெரிவித்திருந்தது.

அதன்பேரில் நேற்று திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தாசில்தார் சரளா தலைமையில் வேங்கிக்கால் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதனையொட்டி ஊராட்சி அலுவலகத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நம்பிக்கை இல்லா தீர்மானம்

இதில் கலந்து கொண்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் 11 பேரும் ஒருமனதாக அ.தி.மு.க. துணை தலைவர் பாலா மூர்த்திக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்து எழுத்துப்பூர்வமாக தாசில்தாரிடம் வழங்கினர்.

இது குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், ''ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் கூட்டம் நடத்தப்பட்டு அதனை வீடியோ பதிவுகள் செய்யப்பட்டு உள்ளது. இதில் கொண்டு வரப்பட்டு உள்ள தீர்மானங்களின் விவரம் கலெக்டரிடம் சமர்ப்பிக்கப்படும்'' என்றனர்.

மேலும் வார்டு உறுப்பினர்கள் கூறுகையில், ''துணை தலைவர் ஒத்துழைப்பு வழங்காததால் தங்கள் பகுதிகளில் கடந்த பல மாதங்களாக எந்தவித பணிகளும் நடைபெறாமல் அவதிப்பட்டு வருகின்றோம். மக்கள் கேள்விகளுக்கு தங்களால் எந்த பதிலும் கூற முடியவில்லை. எனவே துணைத் தலைவர் பாலா மூர்த்திக்கு எதிராக மன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒரு மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளோம்'' என்றனர்.

இதனால் வேங்கிக்கால் பகுதியில் நேற்று சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்