நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி2026 சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லைஅ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி பேட்டி

Update: 2023-09-28 19:00 GMT

'நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை' என அ.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

சட்டசபை தேர்தலிலும்...

கிருஷ்ணகிரியில் உள்ள கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 25-ந் தேதி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேறியது. அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து பா.ஜ.க.வையும் வெளியேற்றியது. அ.தி.மு.க. தொண்டர்களின் ஒருமித்த கருத்துடன் பா.ஜனதாவுடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டணி முறிந்துள்ளது.

பா.ஜனதா மாநில தலைமையை மாற்ற வேண்டும் என கூறும் அளவிற்கு அ.தி.மு.க. நாகரிகம் தெரியாத கட்சி அல்ல. பொதுச்செயலாளர் பற்றி அவதூறாக பேசினால் எப்படி எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும். அதனால் தான் கூட்டணியில் இருந்து விலகி விட்டோம். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமல்ல, 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்காது.

குரல்கள் ஒலிக்கும்

ஆனால் தி.மு.க.வோ அண்ணாவை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க தவறி உள்ளது. இந்திராகாந்தி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் மு.க.ஸ்டாலின். தற்போது `இந்தியா' கூட்டணியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. இணைந்துள்ளது. எனவே கொள்கைகளை பற்றி பேச முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.

பிஜூ ஜனதா தளம், ஆந்திராவில் உள்ள மாநில கட்சிகள் யாரையும் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கவில்லை. அதுபோல் அ.தி.மு.க.வும் தமிழக மக்களின் நலன், உரிமை, கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும்.

தேர்தல் நேரத்தில் மத்திய பா.ஜனதா அரசு தமிழகத்திற்கு செய்ய தவறிய திட்டங்களை எடுத்துரைப்போம். அவர்கள் செய்த நல்ல திட்டங்களை பாராட்டுவோம். தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் நலம் தரும் திட்டங்களை நிறைவேற்றும் வகையில் எங்களது கூட்டணியை வலுவாக்கி மக்களவையில் எங்களது குரல்கள் ஒலிக்கும்.

தி.மு.க.வுக்கு பயம்

பா.ஜனதாவில் இருந்து நாங்கள் வெளியில் வந்தவுடன் தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது. அவர்களது கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த தொடங்கி விட்டனர். ஆனால் யார்? யார்? எந்த அணியில் இருப்பார்கள் என்பது இப்போது தெரியாது. காலம் தான் பதில் சொல்லும். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மெகா கூட்டணி அமைந்து நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., ஊத்தங்கரை தமிழ்செல்வம் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்