சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க சென்னை ஐகோர்ட்டில் என்.எல்.சி. ஒப்புதல்

என்.எல்.சி. நிறுவனத்தால் சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் ஆகஸ்டு 6ம் தேதிக்குள் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-08-02 11:42 GMT

சென்னை,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் செயல்பட்டு வரும் என்.எல்.சி. நிறுவனத்தின் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டது. இதில், விளைநிலங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த பயிர்கள் மீது பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சுரங்கத்திற்கான கால்வாய் தோண்டும் பணி மேற்கொள்ளப்பட்டது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.மேலும், அப்பகுதி மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, விவசாயிகள் முதல் அரசியல் தலைவர்கள் வரை பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்தனர். இது தொடர்பாக, என்.எல்.சி. நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை அறுவடை செய்யும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது என கோரி சென்னை ஐகோர்ட்டில் பாதிக்கப்பட்ட விளை நிலத்தின் உரிமையாளர் வளையமாதேவி கிராமத்தை சேர்ந்த விவசாயி முருகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு தரப்படும் என தெரிவித்திருந்த நிலையில், சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், இந்த இழப்பீடு தொகையானது வரும் ஆகஸ்டு 6ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என கூறியதோடு, இதற்கான அறிக்கையை 7ம் தேதி நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று என்.எல்.சி. நிறுவனத்திற்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் செப்டம்பர் 15ம் தேதிக்கு மேல் எந்த விவசாய பணிகளும் மேற்கொள்ளக்கூடாது எனவும், நில உரிமையாளர்கள் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் எந்த செயலிலும் ஈடுபட கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்படி செய்தால் உரிய நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க உரிய நபர்களை செப்டம்பர் 15ம் தேதிக்கு பிறகு நியமிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பாதுகாக்க என்.எல்.சி. தவறிவிட்டது. அதில் பயிரிட்டதும் விவசாயிகளின் தவறு. இதற்கு இரு தரப்பும் சமபங்கு பொறுப்பாவார்கள் என்று நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இந்நிலையில், ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு தரப்படும் என தெரிவித்திருந்த நிலையில், சேதப்படுத்தப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க கோரி என்.எல்.சி. நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு என்.எல்.சி. நிறுவனமும் ஒப்புதல் தெரிவித்தது. 53 காசோலைகளை சிறப்பு தாசில்தாரிடம் ஒப்படைத்தது என்.எல்.சி. நிறுவனம்.

Tags:    

மேலும் செய்திகள்