என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் பஸ் கவிழ்ந்து 36 பேர் படுகாயம்

நெய்வேலியில் என்.எல்.சி. 2-வது சுரங்கத்துக்குள் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து சென்ற பஸ் கவிழ்ந்து 36 பேர் படுகாயமடைந்தனர்.

Update: 2023-08-16 19:59 GMT

நெய்வேலி, 

முதற்கட்ட பணிக்கு வந்த தொழிலாளர்கள்

நெய்வேலியில் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு உள்ள 3 நிலக்கரி சுரங்கங்களுக்கும் பணிக்கு செல்லும் தொழிலாளர்களை நிறுவனமே தனியாக பஸ் வைத்து அழைத்து செல்வது வழக்கம்.

அதன்படி, நேற்று காலை 6 மணிக்கு முதற்கட்ட பணிக்கு தொழிலாளர்கள் சென்றனர். இதில் மந்தாரக்குப்பத்தில் உள்ள 2-வது நிலக்கரி சுரங்கம் நுழைவு வாயில் பகுதியில் இருந்து வழக்கம் போல் என்.எல்.சி. நிறுவனம் தனது பஸ்சில் தொழிலாளர்களை அழைத்துக்கொண்டு சுரங்கத்துக்குள் புறப்பட்டது. இதில் சுமார் 40 தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.

கழன்று ஓடிய டயர்கள்

சுரங்கத்துக்குள் கிராவல் யார்டு என்ற பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ்சின் முன்பக்கத்தில் அச்சுமுறிந்து 2 டயர்களும் கழன்று ஓடியது.

இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், கண்ணிமைக்கும் நேரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்கள் கூச்சலிட்டனர். உடன் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்கும் பணியல் ஈடுபட்டனர்.

36 பேர் படுகாயம்

பஸ்சில் பயணம் செய்தவர்களில் 2 அதிகாரிகள், நிரந்தர தொழிலாளர்கள், இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர் பயிற்றுநர்கள் என்று மொத்தம் 36 பேர் படுகாயமடைந்தனர்.

இவர்கள் அனைவரும் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். இவர்களில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி, புதுச்சேரி, சென்னை ஆகிய பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்