நீலகிரி வெள்ளைப்பூண்டு விலை உயர்வு

வெளிமார்க்கெட்டுகளில் நீலகிரி வெள்ளைப்பூண்டு விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Update: 2023-07-21 19:45 GMT

ஊட்டி

வெளிமார்க்கெட்டுகளில் நீலகிரி வெள்ளைப்பூண்டு விலை உயர்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

வெள்ளைப்பூண்டு

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக மலைக்காய்கறிகள் விவசாயமே பிரதானமாக உள்ளது. கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், முள்ளங்கி, நூல்கோல், பீன்ஸ், வெள்ளைப்பூண்டு உள்ளிட்டவை மட்டுமின்றி ஏற்றுமதி தரம் வாய்ந்த இங்கிலீஷ் காய்கறிகளையும் விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர்.

நீலகிரியில் விளையும் வெள்ளைப்பூண்டு அதிக காரத்தன்மை கொண்டதாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் உள்ளது. இதனால் எப்போதும் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரிலும் வரவேற்பு இருந்து வருகிறது. இதனால் ஊட்டி, குந்தா கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

விலை உயர்வு

இந்த நிலையில் விவசாயிகள் தங்களது தோட்டங்களில் விளைந்த வெள்ளைப்பூண்டுகளை அறுவடை செய்து, லாரிகள் மூலம் ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைத்து வருகின்றனர்.

ஆனால் வெள்ளைப்பூண்டு வரத்து குறைவு காரணமாக மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் விலை அதிகரித்து உள்ளது. ஒரு கிலோ கடந்த வாரம் ரூ.240 வரை விற்ற நிலையில், தற்போது ரூ.400-க்கு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

சாகுபடி பரப்பு குறைந்தது

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நீலகிரியில் கடந்த ஆண்டு கிலோ ரூ.70 வரை மட்டுமே வெள்ளைப்பூண்டு ஏலம் போனது. இதனால் ஏராளமானோர் வெள்ளைப்பூண்டு சாகுபடியை நிறுத்திவிட்டு மாற்று பயிர் சாகுபடிக்கு சென்றனர். வழக்கமாக சுமார் 1,000 ஹெக்டேர் வெள்ளைப்பூண்டு சாகுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது சுமார் 600 ஹெக்டேர் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.இந்த ஆண்டு விளைச்சல் நன்றாக இருந்தாலும், சாகுபடி பரப்பு குறைந்ததால் வரத்து இல்லை. இதனால் விலை அதிகரித்துள்ளது. மேலும் கர்நாடக வெள்ளைப்பூண்டு தற்போது கிலோ ரூ.160-க்கும், தாளவாடி வெள்ளைப்பூண்டு கிலோ ரூ.220-க்கும் விற்பனை ஆகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்