குப்பைகள் மூலம் வருமானம் பெறும் நீலவங்கி திட்டம்

கீழ்வேளூரில் குப்பைகள் மூலம் வருமானம் பெறும் நீலவங்கி திட்டத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.;

Update:2022-12-31 00:15 IST

சிக்கல்:

கீழ்வேளூரில் குப்பைகள் மூலம் வருமானம் பெறும் நீலவங்கி திட்டத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நீலவங்கி திட்டம்

மத்திய அரசு ஆண்டு தோறும் ஸ்வச் சர்வேஷன் எனும் தூய்மை நகரங்கள் கணக்கெடுப்பு பணியை நடத்தி வருகிறது. ஸ்வச் சர்வேஷன் - 2023 போட்டியில் குப்பையில் இருந்து வளம் என தலைப்பை பயன்படுத்தி நகரங்கள் முன்னோடி முயற்சி எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மக்காத, மறு சுழற்சி கழிவுகளை மீட்டு வருமானம் பெற ஏதுவாக அவற்றை சேகரிக்க புதிய சேகரிப்பு பெட்டகம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மக்காத கழிவுகள் நீல நிறம் என வகை படுத்தப்பட்டுள்ளதால் நீல வங்கி என பெயரிடப்பட்டுள்ளது. அதில் குப்பைகளை தூக்கி எறியாதீர்கள். இங்கே முதலீடு செய்யுங்கள் என பொறிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

குப்பைகளில் இருந்து வருமானம் பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள நீலவங்கி நிகழ்ச்சி கீழ்வேளூர் பேரூராட்சியில் நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் இந்திரா காந்தி சேகர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சந்திரசேகரன், செயல் அலுவலர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீல வங்கி திட்டத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பள்ளியில் படிக்கும் மாணவிகள் தாங்களாகவே குப்பைகளை சேகரித்து பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை பேரூராட்சியால் அமைக்கபட்டுள்ள நீல வங்கி பெட்டகத்தில் சேமிப்பு செய்ய வேண்டும். அந்த குப்பைகள் திரும்ப பயன்படுத்தும் வகையில் கொடுத்தால் அதற்குரிய தொகை கொடுத்து பேரூராட்சி நிர்வாகம் வாங்கிக் கொள்ளும்.

முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ளது

இந்த நீல வங்கி மூலமாக தேசிய அளவில் நல்ல பெயரை உருவாக்க வேண்டிய விஷயம். இதை கருத்தில் கொண்டு மாணவிகள் பயன்படுத்தி கொண்டு திட்டத்தை செயல்படுத்த முன் வரவேண்டும்.

நாகை மாவட்டத்திலேயே இந்த நீல வங்கி திட்டம் கீழ்வேளூர் அஞ்சுவட்டத்தம்மன் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில் முதன் முதலில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதில் பேரூராட்சி உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்