ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் இரவு மாரத்தான் போட்டி - டி.ஜி.பி சைலேந்திரபாபு தொடங்கிவைத்தார்
உடல் ஆரோக்கியம் மற்றும் போதையில்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் இரவு மாரத்தான் போட்டி நடைபெற்றது.
பூந்தமல்லி:
பொதுமக்கள் இடையே உடல் ஆரோக்கியம் மற்றும் போதையில்லா தமிழகம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில் ஆவடி வேல் நகரில் இரவு மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதில் 21 கி.மீட்டர், 10 கி.மீட்டர், 5 கி.மீட்டர் ஆகிய ஓட்டங்களில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து 3,500-க்கும் மேற்பட்ட ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.
இவர்கள் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் ஆவடி பகுதியில் மாரத்தான் ஓட்டத்தை தொடங்கினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கும், முழுமையாக பந்தயத்தை முடித்தவர்களுக்கும் அவர்கள் தேர்ந்தெடுத்த ஓட்டப்பந்தயத்தின் அடிப்படையில் பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
இதில் ஆவடி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கூடுதல் போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, தலைமையிடத்து துணை கமிஷனர் உமையாள், போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் அசோக்குமார், குற்றப்பிரிவு துணை கமிஷனர் பெருமாள், ஆவடி, செங்குன்றம் காவல் மாவட்ட துணை கமிஷனர்கள் மகேஷ், மணிவண்ணன் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள், வீரர்கள் கலந்து கொண்டனர்.