கள்ளக்காதல் விவகாரம் தி.மு.க. பிரமுகர் கொலை : தலை எங்கே...! திணறும் போலீஸ்...!

ஆற்றில் வீசப்பட்ட தலை முக்கியம் என்பதால் கடந்த சில நாள்களாகத் தீயணைப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-21 08:41 GMT

சென்னை

சென்னையை அடுத்த மணலி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சக்கரபாணி (வயது 65). திருவொற்றியூர் 7-வது வார்டு தி.மு.க. பிரதிநிதியான இவர், வட்டிக்கு பணம் கொடுத்து வந்தார்.

கடந்த 10-ந்தேதி வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றவர், அதன்பிறகு வீடு திரும்பி வரவில்லை. தனது தந்தையை காணவில்லை என மணலி போலீஸ் நிலையத்தில் சக்கரபாணியின் மகன் நாகேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் மணலி போலீஸ் உதவி கமிஷனர் தட்சிணாமூர்த்தி தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து கண்காணிப்பு கேமரா மற்றும் செல்போன் சிக்னல் மூலம் தேடினர்.

சக்கரபாணியின் செல்போன் சிக்னலை வைத்து துப்பு துலக்கிய தனிப்படை போலீசார், ராயபுரம் கிரேஸ் கார்டன் 3-வது தெருவில் உள்ள தமீம்பானு (40) என்பவரது வீட்டுக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வீட்டின் குளியல் அறையில் இருந்த சாக்குமூட்டையில் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட நிலையில் சக்கரபாணியின் உடல் காணப்பட்டது.

போலீஸ் விசாரணையில் தமீம்பானு, தனது தம்பி வாசிம் பாஷா(35) உடன் சேர்ந்து சக்கரபாணியை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது தெரிந்தது. ராயபுரம் போலீசார் சக்கரபாணி உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தமீன்பானு, அவருடைய தம்பி வாசிம் பாஷா ஆகியோரை கைது செய்தனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்த ஆட்டோ டிரைவர் டில்லி பாபு(29) தலைமறைவாக இருந்தார்.

தி.மு.க. பிரமுகர் சக்கரபாணியை கொலை செய்தது எப்படி? என போலீசாரிடம் தமீம்பானு வாக்குமூலம் அளித்து உள்ளார். அதில்

நான், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மணலியில் உள்ள சக்கரபாணி வீட்டில் வாடகைக்கு குடியிருந்தேன். எனது கணவர் அஸ்லாம் உஜைனி, சென்னை தியாகராயநகரில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் வாரத்தில் ஒரு நாள் மட்டும் வீட்டுக்கு வருவார். எனக்கு 14 மற்றும் 12 வயதில் 2 மகள்கள் உள்ளனர். சக்கரபாணி எனக்கு வட்டிக்கு பணம் கொடுத்து உதவினார்.

இதனால் எங்களுக்குள் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அதன்பிறகு சக்கரபாணிக்கு தெரியாமல் கடந்த 3 வருடமாக ராயபுரம் கிரேஸ் கார்டன் 3-வது தெருவில் உள்ள ஒரு வீட்டின் 3-வது மாடிக்கு குடியேறினேன்.

இதனை சமீபத்தில் தெரிந்து கொண்ட சக்கரபாணி, என் கணவர் இல்லாத நேரத்தில் கடனை கேட்டு வருவது போல வீட்டுக்கு வருவார். அப்போது என்னுடன் உல்லாசமாக இருந்தார். இதுபோல் தொடர்ந்து அவர், எனது வீட்டுக்கு வந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இது எனக்கு பிடிக்கவில்லை.

இதற்கிடையில் கீழ் வீட்டில் வசிக்கும் ஆட்டோ டிரைவர் டில்லிபாபு என்பவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. நாங்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்தோம்.

இந்தநிலையில் கடந்த10-ந்தேதி இரவு சக்கரபாணி குடிபோதையில் எனது வீட்டுக்கு வந்தார். நான், எனது 2 மகள்களும் வீட்டில் இருக்கிறார்கள். எனவே வீட்டுக்குள் வரவேண்டாம் என்றேன். ஆனால் அதையும் மீறி வீட்டுக்குள் வந்த அவர், வலுக்கட்டாயமாக என்னை கட்டிப்பிடித்து உறவுக்கு வரும்படி அழைத்தார். இதில் ஆத்திரம் அடைந்த நான், அவரிடம் சண்டை போட்டேன்.

அப்போது சத்தம் கேட்டு கீழ் வீட்டில் இருந்து எனது தம்பி வாசிம் பாஷா அங்கு வந்தான். சக்கரபாணியை இனிமேலும் உயிருடன் விட்டு வைக்க கூடாது என்று கருதிய நாங்கள் இருவரும் சேர்ந்து சக்கரபாணியை கீழே தள்ளி, அரிவாள் மனை மற்றும் கத்தியால் வெட்டிக்கொலை செய்தோம்.

பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க அவரது தலையை துண்டித்து தலையையும், குடலையும் தனித்தனியாக பிளாஸ்டிக் பையில் போட்டு கட்டினோம். பின்னர் அதனை டில்லி பாபு, வாசிம்பாஷா இருவரும் ஆட்டோவில் கொண்டு சென்று, குடலை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் பைபர் படகுகள் நிற்கும் பகுதியில் போட்டு விட்டனர்.

தலையை அடையாறு மலர் ஆஸ்பத்திரி அருகே கல்லைகட்டி ஆற்றில் வீசிவிட்டு வீடு திரும்பினர். மறுநாள் மார்க்கெட்டில் பெரிய கத்தியை வாங்கிவந்து சக்கரபாணியின் உடலை 10 துண்டுகளாக வெட்டி, தனித்தனியாக பிளாஸ்டிக் பையில் சுற்றி சாக்கு மூட்டையில் கட்டி குளியலறையில் வைத்தோம்.

துர்நாற்றம் வீசாமல் இருக்க வீடு முழுவதும் வாசனை திரவியங்களை தெளித்தோம். இதற்கிடையே சக்கரபாணியை போலீஸ் தேடுவது தெரிய வந்ததாலும், ஆள்நடமாட்டம் இருந்ததாலும் சக்கரபாணியின் மற்ற உடல் உறுப்புகளை அப்புறப்படுத்த முடியாமல் வீட்டிலேயே வைத்து விட்டு, இரவில் வெளியே தூக்கி கொண்டு போட்டு விடலாம் என்று காத்து இருந்தோம். ஆனால் அதற்குள் போலீசார் வீட்டுக்கு வந்து கண்டுபிடித்து விட்டனர். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருந்தார்.

இந்த வழக்கில் ஆற்றில் வீசப்பட்ட தலை முக்கியம் என்பதால் கடந்த சில நாள்களாகத் தீயணைப்பு படையினர் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு மற்றும் மெரினா மீட்பு படை வீரர்களுடன் ராயபுரம் போலீசார் தலையை தேடும் பணியில் ஈடுபட்டனர். கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டிருந்தாலும் கொலை செய்யப்பட்டவரின் தலை கிடைக்காததால் வழக்கை முடித்து வைக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்