கடலில் மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்பு
மணமேல்குடி அருகே கடலில் மாயமான 4 மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.;
மணமேல்குடி,
4 மீனவர்கள் மாயம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த பொன்னகரம் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் உலக சுந்தரம். இவருக்கு சொந்தமான நாட்டுப்படகில் அவரது மகன்களான குமாரராஜா (வயது 44), மோகனசுந்தரம் (42), யுவராஜா (39) மற்றும் பாலகிருஷ்ணன் மகன் ராஜ் (30) ஆகிய 4 பேரும் கடலில் மீன் பிடிக்க சென்றனர். நேற்று முன்தினம் காலை கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள் கரை திரும்பாததால் அவரது உறவினர்கள் மற்றும் மீனவர் கிராமத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மீனவர்கள் மாயமானது குறித்து மணமேல்குடி மீன்வளத்துறைக்கும், கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
பத்திரமாக மீட்பு
இதையடுத்து, மீன்வளத்துறை உதவி ஆய்வாளர் பெருமாள், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீனவர்கள் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகில் சென்று 4 மீனவர்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது சுமார் 10 நாட்டிக்கல் மைல் தொலைவில் 4 மீனவர்களும் கடலில் தத்தளித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் வந்த நாட்டுப்படகு பலத்த காற்று காரணமாக கவிழ்ந்தது தெரியவந்தது.
இதனைதொடர்ந்து அங்கு சென்ற அதிகாரிகளும், மீனவர்களும் 4 மீனவர்களையும் பத்திரமாக மீட்டனர். மேலும் அவர்கள் வந்த நாட்டுப்படகை கயிறு கட்டி இழுத்து வந்தனர். ஆனால் அந்த படகு எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கியது. இதனைதொடர்ந்து 4 மீனவர்களும் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து மணமேல்குடி கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலில் மாயமான 4 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதால் அவர்களது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.