ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை எனவும், ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது என்றும் சிதம்பரத்தில் நடந்த அறப்போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.

Update: 2022-05-19 17:35 GMT

சிதம்பரம், 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 19-ந் தேதி (அதாவது நேற்று) வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு அறப்போராட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார்.

அந்த வகையில் கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் காந்தி மற்றும் ராஜீவ்காந்தி சிலை அருகில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமையில் நேற்று அறப்போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வெள்ளை துணியால் வாயை கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநில செயலாளர்கள் பி.பி.கே.சித்தார்த்தன், ஜெயச்சந்திரன், டாக்டர் செந்தில்வேலன், நகரமன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கின், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜெமினி எம்.என்.ராதா, ராஜா சம்பத்குமார், வெங்கடேசன், நகர தலைவர் பழனி என்கிற பாலதண்டாயுதம், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் தவர்த்தாம்பட்டு விசுவநாதன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி.செந்தில்நாதன் நன்றி கூறினார்.

குற்றவாளி இல்லை

தொடர்ந்து கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

பேரறிவாளனை குற்றவாளி இல்லை என சொல்லி உச்சநீதிமன்றம் விடுதலை செய்யவில்லை. கவர்னர் காலம் தாழ்த்தியதால்தான் நீதிமன்றம் விடுவித்து இருக்கிறது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சொல்பவர்கள் கூறிய முக்கிய காரணம், அவர் தமிழர். அதனால் தமிழனை விடுதலை செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். ஒரு தமிழன் கொலை குற்றத்துக்கு உள்ளானால், அவரை விடுதலை செய்து விடலாம் என்பது நியதியா?.

பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாளின் மன நிலையை நான் நன்கு அறிவேன். ராஜீவ்காந்தியோடு சேர்த்து 17 பேர் கொலை செய்யப்பட்டனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது. தலைவர் ராஜீவ்காந்திக்கும் குடும்பம் இருக்கிறது. அவர்களின் மனநிலையை நாம் பார்க்க வேண்டும். கன்றுக்குட்டி மீது தேரை ஏற்றியது தவறு எனக்கூறி தனது மகனையே கொன்ற மனுநீதி சோழன் வாழ்ந்த பூமி இது.

கொள்கை வேறு, கூட்டணி வேறு

கொலைகாரர்களுக்கு பரிந்து பேசினால் அதை சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?, இது நியாயமற்ற செயல். பேரறிவாளன், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் மிக முக்கிய குற்றவாளி என ஆதாரங்களை தெரிவித்ததாக அந்த விசாரணை அதிகாரி தெரிவித்திருக்கிறார். தமிழக சிறைகளில் இதுவரை 600, 700 பேர் சிறையில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என ஏன் யாரும் கூறவில்லை.

இந்த விவகாரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த மன வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறது. கொள்கை வேறு, கூட்டணி வேறு. எங்களது கொள்கைகளை பற்றி அவர்கள் ஏன் என்று கேட்கப்போவதில்லை. அவர்களது கொள்கைகளை பற்றி நாங்கள் எதுவும் பேசுவதில்லை.

யுத்தம் என ஒன்று வந்தால் பலர் இறக்கத்தான் செய்வார்கள் என சட்டமன்றத்தில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அது அவரது கொள்கை. அதுபோல் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள கொள்கையில் யாரும் தலையிட முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்