பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாட்டை கண்காணிக்க புதிய வலைதளம்: முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்

தமிழக பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள புதிய வலைதளத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2023-01-28 00:08 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் துறைகளில் உள்ள புத்தொழில் மற்றும் தொழில் துறை நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக, தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியம், அரசால் நிறுவப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து, வளர்ந்து வரும் துறைகளான மேம்பட்ட உற்பத்தி, எந்திரவியல், விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல், செயற்கை நுண்ணறிவு, உயிர் தொழில்நுட்பம், வெப் 3.0., ஆழமான தொழில்நுட்பம், காலநிலை தொழில்நுட்பம் போன்ற துறைகளில் முதலீடு செய்யப்படும்.

இந்த நிதியத்தை தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனம் நிர்வகிக்கும். அதில் தமிழக அரசு ரூ.50 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. டிட்கோ, டைடல் பூங்கா ஆகியவை ரூ.50 கோடி முதலீடு செய்ய உறுதி செய்துள்ளது. இந்த நிதியம் அதன் நிதியை 2023-24-ம் நிதியாண்டில் ரூ.500 கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

5 நிறுவனங்கள்

தமிழ்நாடு வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதியத்தின் மூலமாக நிறுவனங்களுக்கு முதலீடுகள் வழங்க, விளம்பரங்களின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தன்னாட்சி முதலீட்டுக் குழுவால் முதல் 5 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அந்நிறுவனங்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடு அனுமதி கடிதங்களை வழங்கினார்.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த இ-சந்தை நிறுவனம் தமிழகத்தில் உள்ள 2-ம் மற்றும் 3-ம் நிலை நகரங்களில் உள்ள வியாபாரிகளுக்கு பழங்கள் மற்றும் காய்கறிகளை வினியோகிக்க இணையச் சந்தை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்த நிதியிலிருந்து இ-சந்தையில் முதலீடு செய்ய 1 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எவை எவை?

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த கைகள் நிறுவனம் இணைய அடிப்படையிலான டிஜிட்டல் தளம் மூலம் அடிப்படை தொழிலாளரையும் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களையும் இணைக்கிறது. இந்த இணையதளம் தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் இயங்குமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிதியிலிருந்து கைகள் நிறுவனத்தில் முதலீடு செய்ய ரூ.2 கோடி ரூபாய் செய்யப்பட்டுள்ளது.

ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்காவில் அமைந்துள்ள பிளானிடிக்ஸ் நிறுவனம், சுகாதாரத்துறை சார்ந்த நிறுவனங்களில் உள்ள விநியோக சங்கிலியை திட்டமிடவும், இருப்புக் கணக்கினை நிர்வகிக்கவும் மென்பொருளை உருவாக்கி நடத்தி வருகிறது. இந்த நிதியிலிருந்து பிளானிடிக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேயிலை தோட்டங்களில் உள்ள தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுசெய்ய தேயிலை அறுவடை செய்யும் தானியங்கி எந்திரத்தை சூரிநோவா நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனத்திற்கு ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புற்றுநோய், இதயநோய், சிறுநீரக நோய் போன்ற தீவிர நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிற விலையுயர்ந்த மருந்துகளை மலிவான விலைகளில் இணையம் மூலம் வழங்க ஒரு டிஜிட்டல் தளத்தை மிஸ்டர் மெட் நிறுவனம் உருவாக்கி நடத்தி வருகிறது. இந்நிறுவனத்திற்கு ரூ.3.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வலைதளம் தொடக்கம்

தமிழ்நாட்டில் தற்போது 66 மாநில பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிறுவனங்கள் செயல்படுவதை கண்காணிப்பதற்காக நிதித்துறையால் உருவாக்கப்பட்டுள்ள, நிறுவனங்களின் விதிகளை பின்பற்றுதல் மற்றும் நிதி கண்காணிப்பு முறைமைக்கான www.ccfms.tn.gov.in என்ற வலைதளத்தை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

இப்புதிய வலைதளம், பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்களின் நிதி மற்றும் நிர்வாக செயல்பாடுகள் தொடர்பான தகவல்களை அரசிடம் எளிதாக பகிர்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மென்பொருள் பல்வேறு தகவல்களை சேகரிக்கவும், நிறுவனங்கள் சட்டம் 2013-ன் விதிமீறல்களை அடையாளம் காணவும், அந்தந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மற்றும் தொடர்புடைய முக்கிய அலுவலர்களுக்கு தானியங்கி எச்சரிக்கை குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் செய்திகளை உருவாக்கவும், அதன்மூலம் அத்தகைய விதிமீறல்களை சரிசெய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பங்கேற்றோர்

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கிருஷ்ணன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் மற்றும் தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் அருண்ராய், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்