சத்தியமங்கலத்தில் ரூ.2½ கோடியில் புதிய தார் ரோடுகள்; நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சத்தியமங்கலத்தில் ரூ.2½ கோடியில் புதிய தார் ரோடுகள் போடப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2023-08-01 04:09 IST

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தில் ரூ.2½ கோடியில் புதிய தார் ரோடுகள் போடப்படும் என்று நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நகராட்சி கூட்டம்

சத்தியமங்கலம் நகராட்சி மாதாந்திர கூட்டம் தலைவர் ஆர்.ஜானகிராமசாமி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் ஆர்.நடராஜ் முன்னிலை விதித்தார். சுகாதார அதிகாரி சக்திவேல் உள்பட அலுவலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சத்தியமங்கலத்தில் இருந்து பெரியகுளம் வரை ரூ.1 கோடி மதிப்பிலும், சத்தியமங்கலத்தில் இருந்து புளியங்கோம்பை மற்றும் கம்பத்ராயன் புதூர் வரை ரூ.1 கோடி மதிப்பிலும், சத்தியமங்கலத்தில் இருந்து தனவாசி எம்.ஜி.ஆர்.நகர் வரை ரூ.63 லட்சம் மதிப்பில் புதிய தார் ரோடுகள் போடப்படும் என்பது உள்பட கூட்டத்தில் 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நடந்த விவாதங்கள் வருமாறு:-

தலைவர் ஆர்.ஜானகிராமசாமி:- மாதந்தோறும் மதிப்பூதியமாக நகராட்சி தலைவருக்கு ரூ.15 ஆயிரம், துணை தலைவருக்கு ரூ.10 ஆயிரம், கவுன்சிலர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த மதிப்பூதியம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.

கஷ்டப்படுகிறார்கள்...

வேலுச்சாமி (தி.மு.க,):- நகராட்சி கடை நடத்துபவர்கள் கஷ்டப்படுகிறார்கள். வாடகை அதிகம் எனக்கூறி கொண்டிருக்கிறார்கள். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.

தலைவர் ஜானகிராமசாமி:- கடை நடத்துபவர்களுக்கு இந்த மாதம் 31-ந் தேதி வரை கடை நடத்திக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஆர்.டி.எம் கூட்டத்தில் பேசுவதற்காக நம்முடைய ஆணையாளரும் சென்று இருக்கிறார். அதை பற்றி தெரிந்த பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

வடிகால் வசதி

அரவிந்த்சாகர்(பா.ஜ.க.):- கோர்ட்டு வளாகம் உள்ள வீதியில் வடிகால் வசதி இல்லை. பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதியான அங்கு உடனடியாக வடிகால் வசதி செய்து கொடுக்கவேண்டும்.

தலைவர் ஜானகிராமசாமி:-குடிநீர் குழாய் இணைப்பு நடைபெற்று கொண்டு இருக்கின்றன. இந்த பணிகள் முடிந்த பிறகு அங்கு வடிகால் அமைக்கப்படும்.

லட்சுமணன் (அ.தி.மு.க.):- சத்தியமங்கலத்தில் பவானி ஆற்றின் ஓரம் போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள பிள்ளையார் கோவிலுக்கு பொதுமக்கள் செல்வதற்கு கூட வழியில்லாமல் அடைத்து விட்டார்கள். இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தலைவர் ஜானகிராமசாமி:-நேரில் பார்வையிட்டு அது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

மின் இணைப்பு

எஸ்ஆர்.வேலுச்சாமி (தி.மு.க.):-எனது வார்டில் மின்சார இணைப்பு வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டால் கண்டிஷன் பட்டாவில் வீடு இருப்பதால் கொடுக்க இயலாது என கூறுகிறார்கள். இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? தலைவர் ஜானகிராமசாமி:- இது தொடர்பாக அதிகாரியிடம் பேசி தக்க ஏற்பாடு செய்யப்படும்.

சீனிவாசன் (தி.மு.க.):- வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுடைய கணக்கு எடுக்கும் பணி நீண்ட காலமாக எடுக்கப் படவில்லை. இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு உதவிகள் எதுவும் கிடைப்பதில்லை.

தலைவர் ஜானகி ராமசாமி:- இது அரசு எடுக்க வேண்டிய தீர்மானம். இருப்பினும் நாம் இதை கோரிக்கையாக முன் வைக்கலாம்.

இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்