அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்த புதிய கட்டுப்பாடுகள் -தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் அங்கீகாரமற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்தும் திட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-02-07 00:25 GMT

சென்னை,

தமிழகத்தில் அங்கீகாரம் பெறாத மனைப்பிரிவுகளை பதிவு செய்யக்கூடாது என்று கடந்த 2016-ல் பதிவுத்துறைக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது. அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் மனை வாங்கியவர்களுக்கு இது பேரதிர்ச்சியை அளித்தது. எனவே அவர்களின் பாதிப்பை போக்கும் வகையில் அதுபோன்ற மனைப்பிரிவுகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அளிப்பதற்காக கடந்த 2017-ம் ஆண்டு மனை வரைமுறைப்படுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதற்கான காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. சில நிபந்தனைகளின் அடிப்படையில் அதுபோன்ற மனைகள் வரைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த சூழ்நிலையில் மனை தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலிப்பது தொடர்பாக கூடுதலான வழிகாட்டுதல்களை நகர ஊரமைப்புத்துறை வெளியிட்டுள்ளது.

உண்மை பரப்பளவு

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட அலுவலகங்களுக்கும் நகர ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனைகளை பொறுத்து கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணைகள் படி வரைமுறைப்படுத்தி உத்தரவு வழங்கப்படுகிறது. இதற்கான அரசாணைகளின் படி கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் 20-ந் தேதிக்கு முன்னதாக அனுமதியற்ற மனைப்பிரிவு அமைக்கப்பட்டதை நிரூபிக்கும் வகையில் தற்போது, இதுபோன்ற மனைப்பிரிவில் உள்ள மனை விற்பனை செய்யப்பட்டதற்கான பத்திரப்பதிவுத்துறையின் முத்திரையிடப்பட்ட மனைப்பிரிவு வரைபடம் இணைக்கப்பட்டு உள்ள கிரையப்பத்திரம் பெறப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் பரிசீலனை செய்யப்படுகிறது. ஆனால் மனைப்பிரிவு வரைபடத்தின் நகல் மட்டும் விண்ணப்பத்துடன் பெறப்படுவதால், அந்த மனையின் உண்மையான பரப்பளவை அறிய முடியவில்லை.

பரிசீலிக்க வேண்டும்

அதோடு மனுதாரரால் கூடுதலாக பரப்பளவு சேர்க்கப்பட்டு அதற்கும் வரைமுறை பெறும் நிலை உள்ளது. எனவே அதை தடுக்கும் வகையில், இனி அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரைமுறைப்படுத்த கோரி பெறப்படும் விண்ணப்பத்துடன் இணைத்து பெறப்படும் (20.10.2016 தேதிக்கு முந்தைய) மனைப்பிரிவு வரைபடம் இணைக்கப்பட்ட கிரையப்பத்திர நகலை பத்திரப்பதிவுத்துறைக்கு அனுப்ப வேண்டும். அல்லது அந்த மனைப்பிரிவின் இதர விவரங்களை பத்திரப்பதிவுத்துறைக்கு அனுப்ப வேண்டும்.

மேலும், அந்த மனைப்பிரிவு 20.10.2016 அன்றைய தேதிக்கு முன் எவ்வளவு பரப்பளவில் அமைந்திருந்தது என்பதன் உண்மைத்தன்மை குறித்து சார்பதிவாளரிடம் விவரம் பெற வேண்டும். அதன்பின்னரே அங்கீகாரமற்ற மனைப்பிரிவு தொடர்பான விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்