மேல்மலையனூர்அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் விழாஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனா்.

Update: 2022-12-24 18:45 GMT


மேல்மலையனூர், 

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, மார்கழி மாதத்திற்கான அமாவாசை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் பால், தயிர், மஞ்சள், சந்தனம், விபூதி குங்குமம், பஞ்சாமிர்தம், தேன், இளநீர், பன்னீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

பின்னர், உற்சவ அம்மனுக்கு பலவித பூக்கள் மற்றும் எலுமிச்சம்பழ மாலைகளால் மாரியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தது.

இரவு 11 மணியளவில் அங்கிருந்த உற்சவ அம்மனை பம்பை, மேளம் முழங்க வடக்கு வாயில் வழியாக கொண்டு செல்லப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் எழுந்தருள செய்தனர்.

பின்பு பூசாரிகள் பக்திப்பாடல்களைப் பாடியவுடன், அம்மன் ஊஞ்சலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவு 12 மணிக்கு தாலாட்டுப்பாடல்கள் பாடி அம்மனுக்கு குங்குமம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சந்தானம் பூசாரி, அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, ஆய்வாளர் சங்கீதா, கண்காணிப்பாளர் வேலு மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்