மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்: தேனியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தேனியில் கலெக்டர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-05 16:51 GMT

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்று, உயர்கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் நடந்த விழாவில் இன்று தொடங்கி வைத்தார். தேனி மாவட்டத்தில் இந்த திட்டத்தின் தொடக்க விழா தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவின் போது, சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று இந்த திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் நடந்த விழாவில், மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி பற்று அட்டைகளை (டெபிட் கார்டு) கலெக்டர் முரளிதரன் வழங்கி இந்த திட்ட பணியை தொடங்கி வைத்தார். விழாவில் கலெக்டர் பேசும்போது, "இத்திட்டத்தில் தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 35 அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் 890 மாணவிகள் மாதம் ரூ.1,000 வழங்குவதற்கான பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 303 பேருக்கு தற்போது டெபிட் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மற்றவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்" என்றார். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கவேல், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், கல்லூரி செயலாளர் காசிபிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மாவட்ட சமூக நல அலுவலர் ஷியாமளா தேவி வரவேற்றார். முடிவில் கல்லூரி முதல்வர் சித்ரா நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்