திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மரபு மேலாண்மை பட்டய படிப்பு தொடக்கம்

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இதுமுதன்முறை என தமிழ் துறைத்தலைவர் கூறினார்.

Update: 2022-12-10 19:00 GMT

திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வெட்டியல் மரபு மேலாண்மை பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே இதுமுதன்முறை என தமிழ் துறைத்தலைவர் கூறினார்.

மத்திய பல்கலைக்கழகம்

திருவாரூர் நீலக்குடியில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அமைந்து உள்ளது. இங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் கடந்த 2 ஆண்டுகளாக மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள சமுதாய கல்லூரியில் டிப்ளமோ எனப்படும் பட்டய சான்றிதழ் படிப்புகளும் அறிமுகம் செய்யப்பட்டு இங்கு, பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன.

புதிய பட்டய படிப்பு

அந்த வகையில் இந்த ஆண்டு திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் இல்லாத வகையில் கல்வெட்டியல் மரபு மேலாண்மை என்கின்ற புதிய பட்டய படிப்பு அறிமும் செய்யப்பட்டுள்ளது.

இதில் சேர்வதற்கு குறைந்தபட்ச தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. இந்த பட்டய படிப்பை படிப்பதற்கு வயது வரம்பு தேவையில்லை. இதற்கான வகுப்புகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மத்திய பல்கலைக்கழக சமுதாய கல்லூரியில் நடைபெறும்.

தமிழகத்தில் முதன் முதலாக...

இது குறித்து திருவாரூர் மத்திய பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் ரவி கூறுகையில், 'கல்வெட்டியல் மரபு மேலாண்மை என்கிற படிப்பை தமிழகத்திலேயே முதன் முதலாக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம்.

இந்த படிப்புக்கு இதுவரை தமிழகம் முழுவதிலும் இருந்து 50-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன. அதில் 35 பேர் இதுவரை இந்த படிப்பில் சேர்ந்துள்ளனர்.

தமிழ் மரபுகள்

குறைந்தபட்சம் 20 மாணவர்கள் இந்த படிப்பில் சேரலாம் என்கிற நிலையில் 35 பேர் ஆர்வமுடன் இதில் சேர்ந்துள்ளனர். அழிந்து வரும் தமிழக வரலாற்று மற்றும் பண்பாட்டு மரபுகளை மீட்பதே இந்த பட்டயப் படிப்பின் நோக்கமாகும். தமிழ் தொல் எழுத்துக்கள், ஓலைச்சுவடிகள், பட்டெழுத்துக்கள், பழங்கால கருவிகள் போன்றவற்றை மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் இந்த படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகத்தின் அனைத்து புராதன வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கும் மாணவர்களை நேரில் அழைத்துச்சென்று கல்வெட்டுகள், பழங்கால தொல் எழுத்துக்கள், வட்டெழுத்துக்கள், பிராமி எழுத்துக்கள் போன்றவற்றை பற்றி வகுப்பு எடுக்கப்படும்.

வேலைவாய்ப்பு

இதில் படித்து சான்றிதழ் பெறுபவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்வதுடன் தொல்லியல் துறை அரசு அருங்காட்சியகம், தமிழ் வளர்ச்சித் துறை, தமிழ் வளர்ச்சி பண்பாட்டு துறை சுற்றுலாத்துறை போன்ற பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகளையும் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்