நெல்லையில் ரூ.370 கோடியில் புதிய புறவழிச்சாலை; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

நெல்லையில் ரூ.370 கோடியில் புதிதாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும் என்று நெல்லையில் நடந்த அரசு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Update: 2022-09-08 21:51 GMT

நெல்லை:

நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மைதானத்தில் நேற்று அரசு சார்பில் பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழா, அடிக்கல் நாட்டு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கினார். கலெக்டர் விஷ்ணு வரவேற்று பேசினார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ஞானதிரவியம் எம்.பி., நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் பேசினார்கள்.

விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, நெல்லை மாவட்டத்தில் ரூ.74.24 கோடியில் முடிவடைந்த 29 திட்டங்களை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும், ரூ.156.28 கோடி மதிப்பில் 727 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், 30 ஆயிரத்து 658 பேருக்கு ரூ.117.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். ஒட்டு மொத்தமாக ரூ.348 கோடியே 30 லட்சத்திலான திட்டங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது, மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-

சபாநாயகர் அப்பாவு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் அதிகம் பேசினால் உட்காரச்சொல்லுவார். ஆனால், இங்கு அவர் நன்றாக பேசினார். வீரத்தின் விளைநிலமான நெல்லையில் பேசுவதால் பெருமை அடைகிறேன். புலவர்களால் பாராட்டப்பட்ட ஊர், தமிழகத்திலேயே அதிக கல்வி நிறுவனங்கள் முதலில் உருவான ஊர் நெல்லைதான். தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு நகரமும் இதுதான்.

1944-ம் ஆண்டுக்கு பிறகு நெல்லையப்பர் கோவில் குடமுழுக்கை கலைஞர் சிறப்பாக நடத்தி வைத்தார். 1973-ம் ஆண்டு நெல்லை சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தை கட்டி, அதற்கு திருவள்ளுவர் பெயரை சூட்டி மகிழ்ந்தவர் கலைஞர். இத்தகைய சிறப்புமிக்க மாவட்டத்தில் விழா நடக்கிறது. அதில் நான் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நெல்லை மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையிலும், சுற்றுச்சூழல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மணிமுத்தாறு அணை அருகே ரூ.7 கோடி செலவில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும். வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று களக்காட்டில் ஒருங்கிணைந்த வாழை ஏலம் மையம் அமைக்கப்படும்.

நெல்லை மாநகர மக்களின் நலனுக்காக ரூ.370 கோடியில் புதிதாக மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்படும். இதற்கான நிலம் எடுக்கும் பணி நடைபெற்று, 3 கட்டங்களாக திட்டம் நிறைவேற்றப்படும். கடற்கரை கிராமத்தில் விளையாட்டு வீரர்களின் நலனுக்காக ராதாபுரத்தில் விளையாட்டு அரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும்.

தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையில்தான் கர்ப்பணிகளுக்கு 'தாய் கேர் திட்டம்' கொண்டு வரப்பட்டது. நெல்லையில் வ.உ.சி., பாரதியார் படித்த பள்ளிகளை மேம்படுத்த ரூ.1.05 கோடி ஒதுக்கீடு செய்து பணி தொடங்கப்பட்டு உள்ளது. வ.உ.சி.யின் 151-வது பிறந்த நாளையொட்டி நெல்லையில் உள்ள அவரது மணிமண்டபத்தில் ஒலி-ஒளி காட்சி அமைக்க ரூ.70 லட்சம் ஒதுக்கீடு செய்து பணி தொடங்கப்படுகிறது. ஒண்டிவீரன் மணிமண்டபத்தில் ரூ.50 லட்சத்தில் நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஓராண்டு காலத்தில் தி.மு.க. ஆட்சி மக்களுக்கு மிக மிக பயனுள்ளதாக இருந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் 1,113 பேர் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் சேர்ந்து பயன்பெற்றுள்ளனர். கூட்டுறவு சார்பில் 9,389 விவசாயிகள் பயிர்க்கடன் பெற்றுள்ளனர். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் இதுவரை 20 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டத்தில் 54,917 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர். அரசு பஸ்களில் மகளிர் இலவச பயண திட்டத்தில் 6 கோடி 92 லட்சம் மகளிர் இதுவரை பயன் பெற்றுள்ளனர்.

ஒரு லட்சம் விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு புதிதாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் நெல்லை மாவட்டத்தில் 3,421 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். தாமிரபரணி கரையில் அமைந்துள்ள இந்த நெல்லை பொருநை நாகரிகம் தோன்றிய நகரம் ஆகும். எனவே, அதை போற்றும் வகையில் ரூ.15 கோடியில் நெல்லையில் 'பொருநை அருங்காட்சியகம்' அமைக்கப்பட உள்ளது. அந்த பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்துள்ளேன்.

சட்டமன்றத்தில் பேசும் எம்.எல்.ஏ.க்கள் திட்டங்களை கேட்கும்போது தங்களது தொகுதியை பின்தங்கிய தொகுதி என்று கூறுவார்கள். என்னை பொறுத்தவரை பின்தங்கிய தொகுதி என எதுவும் இருக்கக்கூடாது. அதனால் தான் 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தை தொடங்கினேன். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த திட்டம் கிடையாது. தமிழகத்திற்கு வந்த டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், தமிழகத்தின் திட்டங்களை கண்டு வியந்து பாராட்டினார்.

எந்த திட்டத்தையும் அறிவித்த பிறகு தாமதம் செய்யக்கூடாது என்று நினைப்பவன் நான். ஏனென்றான் நான் கலைஞரின் மகன். தமிழகத்தில் மக்களின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுதான் தி.மு.க. அரசின் சாதனை ஆகும். ஒவ்வொரு வீட்டின் கதவையும் கட்டி நன்மை செய்யக்கூடியது அரசாக தி.மு.க. அரசு அமைந்துள்ளது.

நாம் அனைவரும் தமிழ் சமுதாயம் என்ற ஒற்றை குடும்பத்தின் உறுப்பினர்கள். அதில் நானும் ஒருவன். நீங்களும் ஒருவர். நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நமது மாநிலத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக்குவோம். அனைத்து மக்களின் மனங்களிலும் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்தும் ஆட்சியாக நாம் நடத்துவோம். அதுதான் உண்மையான திராவிட மாடல் ஆட்சி. அதைத்தான் தொடர்ந்து வலியுறுத்துகிறோம். எனவே, தொடர்ந்து இந்த அரசுக்கு நீங்கள் ஆதரவு தாருங்கள். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், மனோ தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்