நெல்லையப்பர் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம்

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது.

Update: 2023-07-02 18:57 GMT

நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலில் ஆனித்திருவிழா தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

ஆனித் திருவிழா

தமிழகத்தில் புகழ்பெற்ற சிவாலயங்களில் நெல்லை டவுன் நெல்லையப்பர்- காந்திமதி அம்பாள் கோவிலும் ஒன்றாகும். இங்கு ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. இதில் முதன்மையானதாக ஆனிப்பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது.

கோவிலில் இந்த ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமி-அம்பாளுக்கு பல்வேறு வகையான அபிஷேகம், அலங்கார தீபாராதனை, வீதி உலா மற்றும் பக்தி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 9-ம் திருநாளான நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் சுவாமி தேரில் நெல்லையப்பரும், அம்பாள் தேரில் காந்திமதி அம்பாளும் எழுந்தருளினர். காலை 8.19 மணிக்கு சுவாமி தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

சபாநாயகர் அப்பாவு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஞானதிரவியம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், நயினார் நாகேந்திரன், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன், மாநராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, உதவி ஆணையர் கவிதா, நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணி, நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன் உள்ளிட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநகராட்சி கவுன்சிலர் சந்திரசேகர், வக்கீல் ஜெயபாலன், நெல்லை மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு தலைவர் வி.கே.முருகன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சமூகை முரளி, நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ரிச் பில்டர்ஸ் சேர்மன்கள் ஆதி கார்த்திக், கண்ணன், ஆர்.எஸ்.லாலா அதிபர்கள் ராஜா சுப்பிரமணியன், சத்தியமூர்த்தி, மகாராஷ்வர் உள்ளிட்ட திரளானோர் தேரோட்டத்தில் பங்கேற்றனர்.

அசைந்தாடி வலம் வந்தது

தமிழகத்தின் 3-வது பெரிய தேர் என்ற பெருமைக்குரிய சுவாமி நெல்லையப்பர் தேர் ரத வீதிகளில் அசைந்தாடி வலம் வந்தது காண்போர் மனதை கொள்ளை கொண்டது. 'ஓம் நமச்சிவாய' உள்ளிட்ட பக்தி கோஷங்களை விண்ணதிர முழங்கியவாறு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரின் வடங்களை பிடித்து இழுத்து சென்றனர்.

முழுக்க முழுக்க பக்தர்களின் கைகளால் இழுக்கப்பட்ட தேரோனது அம்பாள் சன்னதி, கிழக்கு ரதவீதி, வாகையடி முக்கு, தெற்கு ரதவீதி, சந்தி பிள்ளையார் கோவில் முக்கு, மேற்கு ரதவீதி, லாலா சத்திரம் முக்கு, வடக்கு ரதவீதி, ஈசான விநாயகர் கோவில் முக்கு, கிழக்கு ரதவீதி சுவாமி சன்னதி வாசல் பகுதி வழியாக வந்தது. சுவாமி தேரின் முன்பாக கம்பீரமாக வலம் வந்த காந்திமதி யானை பக்தர்களுக்கு ஆசி வழங்கியது.

அலைமோதிய பக்தர்கள்

பக்தர்கள் வெள்ளத்தில் தேர் ரதவீதிகளில் வலம் வந்தது. ரதவீதிகள் முழுவதும் பக்தர்களின் தலைகளாகவே காட்சி அளித்தது. மேலும் டவுன் ரதவீதிகளைச் சுற்றியுள்ள அனைத்து தெருக்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ரத வீதிகளில் அசைந்தாடி வந்த தேரின் உச்சியில் நந்திக்கொடி கட்டப்பட்டு இருந்தது. தென்மேற்கு பருவக்காற்று வீசியதால் தேரில் இருந்த நந்திக்கொடி அழகாக பறந்தது.

நெல்லையப்பர் கோவிலில் மொத்தம் 5 தேர்கள் ஓடியது. அதிகாலை 1.30 மணிக்கு விநாயகர் தேரும், 3.30 மணிக்கு முருகபெருமான் தேரும், காலை 8.19 மணிக்கு சுவாமி தேரும், மதியம் காந்திமதி அம்பாள் தேரும் இழுக்கப்பட்டன. சுவாமி, அம்பாள் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிலையை வந்தடைந்தது. தொடர்ந்து இரவில் சண்டிகேசுவரர் தேர் வலம் வந்தது. தேரோட்டத்தின்போது ரதவீதிகளில் ஆம்புலன்ஸ், மருத்துவ குழு, தீயணைப்பு வாகனம் ஆகியவையும் தயார் நிலையில் இருந்தன. .

போலீஸ் பாதுகாப்பு

தேரோட்டத்தையொட்டி நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

மேலும் போலீசார் தொலைநோக்கி கருவிகள் மூலமும், ரதவீதிகளில் நிறுவப்பட்டிருந்த தற்காலிக கண்காணிப்பு கோபுரங்களில் நின்றும் கண்காணித்தனர். டிரோன் கேமராக்கள் மூலமும், கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணித்து பக்தர்களுக்கு அறிவுரைகளை வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்