தூய்மை பணியாளர்களின் 2-வது நாள் போராட்டத்தில் பேச்சுவார்த்தை தோல்வி

ஜெயங்கொண்டம் நகராட்சியில் ஆட்குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்களின் 2-வது நாள் போராட்டத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், பந்தல் அகற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-10-02 18:00 GMT

போராட்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சியில் தூய்மை பணியாளர்கள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மிக குறைவான ஊதியத்தைப் பெற்றுக்கொண்டு பணியாற்றி வருகின்றனர் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆட்குறைப்பு என கூறி வேலை செய்து கொண்டிருந்தவர்களில் 25 பெண்கள், 5 ஆண்கள் என 30 ஒப்பந்த தூய்மை பணியாளர்களை நேற்று முன்தினம் முதல் நகராட்சி நிர்வாகமும், ஒப்பந்ததாரரும் பணி நீக்கம் செய்துள்ளனர்.

இதனை எதிர்த்து ஆட்குறைப்பை கைவிட்டு பணிநீக்கம் செய்யப்பட்டவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். மேலும் நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ள ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், கோரிக்கை நிறைவேறும் வரை யாரும் தூய்மை பணிக்கு செல்ல மாட்டோம் என ஒப்பந்த பணியாளர்கள் அனைவரும் நேற்று முன்தினம் காலை முதலே ஜெயங்கொண்டம் நகராட்சி நுழைவுவாயில் முன்பு வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

பேச்சுவார்த்தை தோல்வி

இந்நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் காத்திருக்கும் போராட்டம் இரவிலும் தொடர்ந்தனர். பணியாளர்கள் போராட்டம் நடைபெறும் இடத்திலேயே சமைத்து உண்டு தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதனையடுத்து நேற்று 2-வது நாளாக ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மேலும் இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீசார் மற்றும் தனியார் ஒப்பந்ததாரரிடமும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களை வைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தூய்மை பணியாளர்கள் 30 பேருக்கும் வேலை வழங்கினால் மட்டுமே நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறிவிட்டனர். இதில் தனியார் ஒப்பந்ததாரர் 15 பேருக்கு மட்டுமே வேலை வழங்க முடியும் என தெரிவித்த நிலையில், அதற்கு ஒப்புக்கொள்ளாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

பந்தல் அகற்றம்

இதையடுத்து போலீசார் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு கொடுக்க அறிவுறுத்தி சென்றனர். இந்நிலையில் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மூலம் காத்திருப்பு போராட்டத்திற்காக போடப்பட்டிருந்த பந்தல் நகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டது. அமைதியான முறையில் அறவழிப் போராட்டமாக காத்திருப்பு போராட்டம் நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த நகராட்சி பணியாளர்கள் பந்தலை அகற்றிய சம்பவத்தால் நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினர். இந்நிலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் இதுகுறித்து புகார் மனு அளிக்கப் போவதாகவும், தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்