மாவட்டத்தில் 1,793 பேர் நீட் தேர்வு எழுதினர்
சிவகங்கை மாவட்டத்தில் 1,793 பேர் நீட் தேர்வு எழுதினர். 50 பேர் எழுதவில்லை.
திருப்புவனம்
சிவகங்கை மாவட்டத்தில் 1,793 பேர் நீட் தேர்வு எழுதினர். 50 பேர் எழுதவில்லை.
நீட் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு நீட் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத அறிவிப்பு வெளியான நிலையில் ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். சிவகங்கை மாவட்டத்தில் மொத்தம் 5 மையங்களில் தேர்வு நடைபெற்றது.
அதன்படி காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி, மான்ட்போர்ட் பள்ளி சிவகங்கை, வேலம்மாள் உறைவிட பள்ளி லாடனேந்தல், கேந்திரிய வித்யாலயா பள்ளி காரைக்குடி, கேந்திரிய வித்யாலயா சிவகங்கை ஆகிய 5 மையங்களில் தேர்வு நடந்தது. இந்த தேர்வு எழுத மொத்தம் 1,843 பேர் விண்ணப்பத்திருந்தனர். அதில் 1,793 பேர் எழுதினர். 50 பேர் தேர்வு எழுதவில்லை.
பலத்த சோதனை
தேர்வு மையங்களில் தேர்வு எழுதுவதற்கு அனைத்து வகையான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. கட்டுப்பாடுகளை பின்பற்றி உடல் வெப்ப பரிசோதனை பார்க்கப்பட்டு ஹால் டிக்கெட்டுகள், ஆவணங்கள் போன்றவைகளை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
மேலும் மாணவ-மாணவிகள் செல்போன், ஹெட் போன், நகை உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்ற அறிவிப்பின் பேரில் மாணவிகள் பலர் தாங்கள் போட்டிருந்த தோடுகள், செயின், வாட்ச், ஆகியவற்றை கழற்றி பெற்றோரிடம் கொடுத்துவிட்டு தேர்வு எழுத சென்றனர். பல்வேறு சோதனைகளுக்கு பின்னரே மாணவ, மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். பள்ளியின் உள்ளே ஜாமர் கருவி பொருத்தப்பட்டு இருந்ததால் தேர்வு எழுதும் வளாகம் முழுவதும் செல்போன்கள் இயங்கவில்லை. தேர்வு எழுதுவதற்கு 126 மாணவர்களும், 333 மாணவிகளும் என 459 பேர் வந்திருந்தனர்.