அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு

தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-10 18:45 GMT

தஞ்சை, கும்பகோணம், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் தொடங்கி வைத்தார்.

நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி

தஞ்சை மாவட்டத்தில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி தொடக்க விழா பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்துக்கு மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.

பட்டுக்கோட்டை, அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் தெட்சிணாமூர்த்தி, மதுக்கூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பிரகாஷ் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் மாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

முதன்மைக்கல்வி அதிகாரி பேச்சு

இதனை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

கடந்த ஆண்டு 16 மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பிற்குச் சென்றுள்ளனர். இந்த ஆண்டு கூடுதலாக மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளுக்கான இடத்தை 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நம் மாவட்டம் பெற வேண்டும். ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் மாணவர்களுக்கு இலவசமாக நீட் பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசுப் பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்கு அரசு பல்வேறு வகையான உதவிகளை செய்து வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உயர்கல்வி வழிகாட்டுதல்களை அரசே வழங்கி வருகிறது. பெற்றோர்கள், மாணவர்களின் ஆர்வம் அறிந்து உயர் படிப்புகளுக்கு வழிகாட்டுதல்களை ஆசிரியர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். அனுபவமும், திறமையும் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களைக் கொண்டு இந்த நீட் பயிற்சி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தஞ்சை- கும்பகோணம்

தஞ்சை அரண்மனை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த நீட்தேர்வுக்கான பயிற்சியினை தஞ்சை, மாவட்டக்கல்வி அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் (மேல்நிலை) பழனிவேல் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் நாச்சியார்கோவில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இப்பயிற்சியினை கும்பகோணம், மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் தலைமை ஆசிரியர் அல்லி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

மாணவருக்கு பரிசு

நிகழ்ச்சியின் இறுதியில் தமிழக அளவில் ராக்கெட் அறிவியலில் தேர்வாகி அரசு நிதியுதவியுடன் ரஷ்யா ராக்கெட் ஏவுதளத்திற்கு செல்லவிருக்கும் மதுக்கூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் சந்தோஷ் என்பவருக்கு முதன்மைக் கல்வி அலுவலர் நினைவுப்பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்